தலையில் அம்மிக்கல்லை போட்டுவடமாநில ஐஸ் வியாபாரி கொலை


தலையில் அம்மிக்கல்லை போட்டுவடமாநில ஐஸ் வியாபாரி கொலை
x
தினத்தந்தி 19 May 2023 12:15 AM IST (Updated: 19 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் அருகே தலையில் அம்மிக்கல்லை போட்டு வடமாநில ஐஸ் வியாபாரி கொலை செய்யப்பட்டார்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் அருகே அம்மிக்கல்லை தலையில் போட்டு வடமாநில ஐஸ் வியாபாரி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

வடமாநில ஐஸ் வியாபாரி

ராஜஸ்தான் மாநிலம் கிராமல்கேடா பீதாஸ் பில்வாரா பகுதியை சேர்ந்தவர் வினோத் தாரோகா (வயது 29). இவர் திருச்செந்தூர் அருகே வீரபாண்டியன்பட்டணம் ராஜ்கண்ணா நகரில் தங்கியிருந்து ஐஸ் வியாபாரம் செய்து வந்தார்.

வினோத் தாரோகா நேற்று வீட்டின் மொட்டை மாடியில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதாக அப்பகுதி மக்கள் திருச்செந்தூர் தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ், இன்ஸ்பெக்டர் முரளிதரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

குடிநீர் பிடிப்பதில் தகராறு

தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் வினோத் தாரோகா கொலை செய்யப்பட்ட திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

அதாவது, வினோத் தாரோகா குடியிருந்து வரும் காம்பவுண்டில் தொழிலாளியான கந்தசாமி என்பவர் தனது மனைவி சினேகாவுடன் வசித்து வருகிறார்.

அங்குள்ள வீட்டு குழாயில் குடிநீர் பிடிப்பதில் வினோத் தாரோகா, சினேகாவுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை அறிந்த கந்தசாமி ஆத்திரத்தில் இருந்தார்.

அம்மிக்கல்லை தலையில் போட்டு

இந்த நிலையில் கந்தசாமி நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வினோத் தாரோகா வீட்டிற்கு சென்றார். அங்கு மொட்டைமாடியில் இருந்த அவரிடம் தகராறு செய்தார். இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த கந்தசாமி அருகில் கிடந்த அம்மிக்கல்லை எடுத்து வினோத் தாரோகாவின் தலையில் தூக்கிப்போட்டதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

வலைவீச்சு

இந்த ெகாலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கந்தசாமியை வலைவீசி தேடிவருகிறார்கள்.

திருச்செந்தூர் அருகே தலையில் அம்மிக்கல்லை போட்டு வடமாநில ஐஸ் வியாபாரி கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story