புத்தளம் பேரூராட்சி வாகனம் பறிமுதல்
பொது இடத்தில் குப்பையை கொட்டியதாக புத்தளம் பேரூராட்சி வாகனத்தை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நாகர்கோவில்,
பொது இடத்தில் குப்பையை கொட்டியதாக புத்தளம் பேரூராட்சி வாகனத்தை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
குப்பை கொட்ட தடை
நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள பொது இடங்களில் குப்பை கொட்ட தடைவிதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி பல்வேறு இடங்களில் குப்பைகள் கொட்டும் கடைகள், கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் அபராதம் விதித்து வருகிறது.
இதற்கிடையே மாநகராட்சியையொட்டியுள்ள பேரூராட்சிகளில் இருந்தும் குப்பை கொட்டப்பட்டு வந்தது. அதை தடுக்க மாநகர் நல அதிகாரி ராம்குமார் தலைமையில் அதிகாரிகளின் குழு அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
வாகனம் பறிமுதல்
இந்த நிலையில் புத்தளம் பேரூராட்சியில் சேகரிக்கப்பட்ட குப்பையை, அந்த பேரூராட்சிக்கு சொந்தமான வாகனம் மூலம் கொண்டு வந்து மாநகராட்சி பகுதியான தெங்கம்புதூர் ஆராட்டு சாலையில் கொட்டி செல்வதாக கூறி நேற்றுமுன்தினம் இரவு அந்தப்பகுதி மக்கள் வாகனத்தை சிறை பிடித்தார்கள். அதைத்தொடர்ந்து மாநகர அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று வாகனத்தை பறிமுதல் செய்தனர். இதுபற்றி அதிகாரி கூறும்போது, 'புத்தளம் பேரூராட்சி வாகனத்தில் கொண்டு வந்த குப்பையை அவர்களது எல்லைப் பகுதியில் தான் கொட்டியதாக கூறினார்கள். இருப்பினும் பொதுமக்கள் புகாரின்பேரில் வாகனத்தை பறிமுதல் செய்துள்ளோம். இதுதொடர்பாக விசாரணை நடத்தி வாகனத்தை விடுவிக்கலாமா? அல்லது அபராதம் விதிக்கலாமா? என்பது முடிவு செய்யப்படும்' என்றார்.