அமைச்சர் தலைக்கு விலை வைப்பது காட்டுமிராண்டித்தனம் - டிடிவி தினகரன்
அமைச்சர் தலைக்கு விலை வைப்பது காட்டுமிராண்டித்தனம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர்,
தஞ்சாவூரில் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
மத உணர்வை பாதிப்பது போல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது தவறு; சனாதனம் என்பது என்னவென்று தெரியாமல் விளையாட்டுத்துறை அமைச்சர் விளையாட்டாக பேசியுள்ளார். அதற்காக அமைச்சர் தலைக்கு விலை பேசுவது அதைவிட காட்டுமிராண்டித்தனம்.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் சாத்தியமில்லை. செலவைக் குறைப்பதற்காக ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்த வேண்டும் எனக் கூறினாலும், ஏற்கனவே தேர்தல் நடைபெற்ற மாநிலங்களில் செலவு அதிகமாகும். எனவே மத்திய அரசு தங்களுக்கு அறுதிப் பெரும்பான்மை இருப்பதால் எதையும் செய்யக்கூடாது. மக்களிடம் கருத்து கேட்ட பிறகு செய்ய வேண்டும்.
எடப்பாடி பழனிசாமி உள்ள கூட்டணியில் இடம் பெற வேண்டுமா என என்னிடம் எங்களது நிர்வாகிகள், தொண்டர்கள் கேட்கின்றனர். அதனால் தனித்து நிற்பது சாலச்சிறந்தது என்ற முடிவை எடுக்கலாம். தீய சக்தியும் ஜெயிக்கக்கூடாது, துரோக சக்தியும் ஜெயிக்கக்கூடாது என்பது எங்களின் நோக்கம்; அதனால் தான் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து நிற்கவும் தயார் என கூறினேன். வருகிற மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதற்கு தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.