புற்று மாரியம்மன் கோவில் தேரோட்டம்


புற்று மாரியம்மன் கோவில் தேரோட்டம்
x

தலைவாசல் சாத்தப்பாடியில் புற்று மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

சேலம்

தலைவாசல்:-

தலைவாசல் சாத்தப்பாடியில் புற்று மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

புற்றுமாரியம்மன் கோவில்

தலைவாசல் அருகே சாத்தப்பாடி கிராமத்தில் புற்றுமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 6-ம் ஆண்டு தேர் திருவிழா கடந்த 17-ந் தேதி சக்தி அழைத்து காப்பு கட்டி விழாவுடன் தொடங்கியது. தேர் திருவிழாவையொட்டி முத்து மாரியம்மனுக்கு பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.

தொடர்ந்து மூப்பனார் கோவிலில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. நவக்கிரகங்கள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. விழா நாட்களில் அம்மனுக்கு புஷ்ப அலங்காரத்தில் வீதி உலா நடந்தது. காத்தவராயன் கழுகு மரம் ஏறுதல், காத்தவராயன் மோடியெடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.

தேரோட்டம்

தஞ்சை கிராமிய குழுவினரின் தாரை, தப்பாட்டம் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை 8 மணிக்கு பெண்கள் பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர். அங்கபிரதட்சணை செய்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். பெண்கள், ஆண்கள் இரும்பு கம்பியால் அலகு குத்தி ஊர்வலமாக வந்தனர். பூங்கரகம், அக்னி கிரகம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் ஆடு, கோழி பலியிட்டு வழிபாடு நடத்தினர்.

நேற்று மாலை 3 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. மேளதாளத்துடன் ேதரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். அம்மன் வேடம் அணிந்து பக்தர் ஒருவர் ஆடி வந்தார். முக்கிய வீதிகள் வழியாக வந்து மாலை 6 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. தேரோட்டத்தில் மாநில மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஆர் இளங்கோவன், எம்.எல்.ஏ.க்கள் நல்லதம்பி, ஜெயசங்கரன், தலைவாசல் ஒன்றிய குழு தலைவர் ராமசாமி, மாவட்ட கவுன்சிலர் இளங்கோவன், பால் கூட்டுறவு சங்க தலைவர் செந்தில்குமார், ஊராட்சி மன்ற தலைவர் ராஜூ உள்பட பலர் கலந்து கொண்டனர். இரவு வாண வேடிக்கை, கரகாட்டம் நடந்தது.


Next Story