2022-23-ம் ஆண்டு கதர் விற்பனை இலக்கு ரூ.60 கோடி


2022-23-ம் ஆண்டு கதர் விற்பனை இலக்கு ரூ.60 கோடி
x

2022-23-ம் ஆண்டு கதர் விற்பனை இலக்கு ரூ.60 கோடிக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் காந்தி தெரிவித்தார்.

ராணிப்பேட்டை

2022-23-ம் ஆண்டு கதர் விற்பனை இலக்கு ரூ.60 கோடிக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் காந்தி தெரிவித்தார்.

தொடக்கவிழா

வாலாஜாவில் எம்.பி.டி. ரோடு அய்யப்பன் கோயில் அருகில் ரூ.7 லட்சத்து 21 ஆயிரம் மதிப்பீட்டில் மறு சீரமைக்கப்பட்ட கதர் விற்பனை அங்காடி, ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் பனை பொருட்கள் விற்பனை அங்காடி திறப்பு விழா நடந்தது. கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பனை பொருட்கள் விற்பனை அங்காடி தொடக்கவிழாவுக்கு கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் நில நிர்வாக ஆணையர் எஸ்.நாகராஜன், தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் தலைமை செயல் அலுவலர் பொ.சங்கர் ஆகியோர் தலைமை தாங்கினர். கலெக்டர் பாஸ்கரபாண்டியன் முன்னிலை வகித்தார்.

கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டு அங்காடியை திறந்து வைத்து, முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

ரூ.60 கோடி இலக்கு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கதர் வாரியத்திற்கு சொந்தமான வணிக வளாகத்தில் புதிதாக நவீன வடிவமைப்பில் கதர் அங்காடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கதர் அங்காடியில் கதர் வேஷ்டி மற்றும் ரெடிமேடு சட்டை, பட்டுப்புடவைகள், புதிய வண்ணக்கலவை மற்றும் வடிவமைப்புகளுடன் கூடிய மெத்தை விரிப்புகள் மற்றும் போர்வை ரகங்கள். சோப்புகள், தேன், அகர்பத்திகள், பாரம்பரிய அரிசி வகைகள், சிறுதானிய வகைகள், மதிப்புக் கூட்டப்பட்ட தேன் வகைகள், பாரம்பரிய மரச் செக்கு எந்திரத்தால் தயாரிக்கப்பட்ட கடலை எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் வகைகள் போன்றவைகள் விற்பகைக்காக வைக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் பெற www.tnkhadi.org - www.tnkhadi.com மற்றும் "tnkhadi" Mobile App அறிமுகமும் மேலும், அமேசான், பிலிப் கார்ட் வாயிலாக விற்பனை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2022-23-ம் ஆண்டு விற்பனை இலக்காக ரூ.60 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பனை பொருட்கள்

பனை மரம் தமிழ்நாடு மாநில மரம் என்பதால், மாநில அரசால் ஏழை பனை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திட அனைத்து உதவிகளையும் தொடர்ந்து வழங்கி வருகிறது.

தமிழ்நாடு சட்டமன்ற பேரவைக் கூட்டத்தில், ரூ.30 லட்சம் செலவில் 10 கலெக்டர் அலுவலக வளாகத்தில் பனைப் பொருள் விற்பனை அங்காடிகள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டதை நிறைவேற்றும் பொருட்டு முதன்முதலாக ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ரூ.3 லட்சம் செலவில் பனைப் பொருட்களை விற்பனை அங்காடி அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு சுக்குகாபி, கருப்பட்டி, பனங்கற்கண்டு. பனங்கற்கண்டு மிட்டாய், பனை சாக்லேட் போன்ற பனை உணவுப் பொருட்களும், உண்ணாப் பொருட்களான பனந்தும்பு தூரிகைகள், அழகுமிகு பனை ஓலைப்பொருட்கள் போன்றவைகளும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், ராணிப்பேட்டை நகராட்சி தலைவர் கே.சுஜாதா வினோத், துணை இயக்குநர்கள் (கதர்) திருப்பதி, பாலகுமார், உதவி இயக்குநர் (பனைபொருள் வணிகம்) கண்ணன், வேலூர் உதவி இயக்குநர் சிவக்குமார், வாலாஜா நகரமன்ற துணைத் தலைவர் கமலராகவன், அரசு அதிகாரிகள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.


Next Story