கியூ ஆர் கோடு ஸ்டிக்கர் ஒட்டும் பணி தொடக்கம்
பொதுமக்கள் புகார், கருத்துகள் தெரிவிக்க மாநகராட்சி அலுவலகங்களில் கியூ ஆர் கோடு ஸ்டிக்கர் ஒட்டும் பணி தொடங்கியது.
பொதுமக்கள் புகார், கருத்துகள் தெரிவிக்க மாநகராட்சி அலுவலகங்களில் கியூ ஆர் கோடு ஸ்டிக்கர் ஒட்டும் பணி தொடங்கியது.
புதிய தொழில் நுட்பம்
வேலூர் மாநகராட்சி எல்லைக்குள் வசிக்கும் பொதுமக்கள் தங்களது சொத்து, குடிநீர் உள்ளிட்ட வரிகள் செலுத்துவதற்கும், அடிப்படை வசதிகள் தொடர்பான புகார்கள் அளிப்பதற்கும் மாநகராட்சி அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இந்தநிலையில் புகார்கள் அளிக்கவும், வரி இனங்கள் செலுத்தவும் கியூ ஆர் கோடு தொழில்நுட்ப முறை பின்பற்றப்பட உள்ளது. அதன்படி இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பொதுமக்கள் எளிய முறையில் வீட்டில் இருந்தபடியே சொத்துவரி, குடிநீர்வரி போன்ற பல்வேறு வரி இனங்களை செலுத்தலாம். மேலும் புகார்களும் தெரிவிக்கலாம்.
அதன்படி மாநகராட்சியில் 1-வது வார்டில் வீடுகளில் இந்த கியூ ஆர் கோடு ஸ்டிக்கர் முதல்கட்டமாக ஒட்டப்பட்டுள்ளது. இதையடுத்து அனைத்து வார்டுகளுக்கும் ஒட்டப்பட உள்ளது.
புகார், கருத்துகள்
இந்த நிலையில் மாநகராட்சி அலுவலகம், மண்டல அலுவலகங்கள், பஸ் நிலையங்கள், வரி செலுத்தும் மையங்கள் உள்ளிட்ட இடங்களிலும் இதேபோன்ற கியூ ஆர் கோடு ஸ்டிக்கர் ஒட்டும் பணி நேற்று தொடங்கியது.
3-வது மண்டல அலுவலகத்தில் கியூ ஆர் கோடு ஸ்டிக்கரை மாநகராட்சி மேயர் சுஜாதா ஒட்டி தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், 'மாநகராட்சிக்கு சம்பந்தப்பட்ட இடங்களில் ஒட்டப்படும் இந்த ஸ்டிக்கரில் மாநகராட்சி தொடர்பாக புகார்கள் மற்றும் வளர்ச்சிக்கு தேவையான கருத்துகளை பொதுமக்கள் தெரிவிக்கலாம்.
இந்த தொழில்நுட்பம் சென்னை நகராட்சி நிர்வாக இயக்குனர் அலுவலகத்தில் இருந்தும், வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்தும் கண்காணிக்கப்படும்' என்றார்.
அப்போது மண்டல குழு தலைவர் யூசுப்கான், உதவி பொறியாளர் வெங்கடேசன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.