விதைகளை காயவைத்து தரமான விதை தயார் செய்யலாம்-வேளாண் அலுவலர்கள் தகவல்
விதைகளை காயவைத்து தரமான விதையை தயார் செய்யலாம் என்று வேளாண் அலுவலர்கள் தெரிவித்து உள்ளனர்.
தூத்துக்குடி:
விதைகளை காயவைத்து தரமான விதையை தயார் செய்யலாம் என்று வேளாண் அலுவலர்கள் தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து நெல்லை விதை பரிசோதனை அலுவலர் ஞா. ஆனந்தி ராதிகா, தூத்துக்குடி விதைப்பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் சேக் நூகு ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
விதைகள்
தூத்துக்குடி மாவட்டத்தில் உளுந்து, பாசிப்பயறு, சோளம், கம்பு போன்ற விதைப் பயிர்களின் அறுவடை முடியும் நிலையில் உள்ளது. அறுவடை செய்த விதைகளை சரியான முறையில் காயவைப்பது அவசியம். அறுவடை சமயம் விதைகளின் ஈரப்பதம் அதிக அளவில் இருக்கும்.
விதையை காய வைப்பது என்பது விதையின் ஈரப்பதத்தை பாதுகாப்பான ஈரப்பதம் வரும் வரை காய வைப்பது ஆகும். ஒவ்வொரு விதைக்கும் அதன் தன்மை, சேமிப்பின் நோக்கம், சேமிக்க பயன்படுத்தப்படும் பைகளைப்பொறுத்து பாதுகாப்பான ஈரப்பதம் என்பது வேறுபடும். விதையை காய வைப்பது விதை உயிருடனும், நல்ல வீரியத்துடனும் சேமிக்க உதவும், இல்லையேல் பூஞ்சானங்களினாலும், வெப்பத்தினாலும், நுண்ணுயிர் தாக்குதலினாலும் விதைகள் பாதிக்கப்படும். விதையை அறுவடை முடிந்த உடன் காய வைத்து பாதுகாப்பான ஈரப்பதத்தில் சேமிக்க வேண்டும். ஓரிரண்டு மாதம் கழித்து காய வைக்கும்போது அறுவடை சூட்டுடன் மூடையிட்டால் விதைகள் கெட்டியாகி அடைகளாக மாறியிருக்கும். மேலும் நிறம் மங்கி, முளைப்புத்தினும் குறைந்திருக்கும்.
முன்னெச்சரிக்கை
விதைகளை காய வைக்கும்போது சில முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்வது அவசியம். அதன்படி ஈரமான அழுக்கான மண்களத்தில் போடக்கூடாது. களத்தில் ஒரே வயலில் இருந்து பெற்பட்ட ஒரே பயிர் ஒரே ரகத்தைத்தான் ஒரே நேரத்தில் கையாள வேண்டும். உச்சி வெயிலில் விதைகளை காய வைக்கக் கூடாது. அந்த நேரத்தில் விதைகளை குவித்து தார்பாய் போட்டு மூடி வைக்க வேண்டும். ஏனெனில் உச்சி வெயிலில் உள்ள புறஊதாக்கதிர்கள் முளைப்புத்திறனை பாதிக்கும். விதைகளை அதிகமாகவும் காயவைக்க கூடாது. ஏனெனில் விதைகள் அதிகமாக காயும்போது விதை மணிகளில் வெடிப்பு ஏற்பட்டு கருச்சிதைவு ஆகி முளைப்புத்திறன் பாதிக்கும். உளுந்து, பாசிப்பயறு போன்ற பயறு வகை பயிர்களின் விதைகளை 9 சதவீத ஈரப்பதத்துக்கும், சோளம், கம்பு போன்ற பயிர்களின் விதைகளை 12 சதவீத ஈரப்பதத்துக்கும் காய வைக்க வேண்டும். எனவே விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் விதைகளை காயவைப்பபதில் தனி அக்கறை காட்ட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.