மக்கள் வழங்கும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
முத்துப்பேட்டையில் நடந்த ஜமாபந்தியில் மக்கள் வழங்கும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் சாருஸ்ரீ அறிவுறுத்தி உள்ளார்.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டையில் நடந்த ஜமாபந்தியில் மக்கள் வழங்கும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் சாருஸ்ரீ அறிவுறுத்தி உள்ளார்.
ஜமாபந்தி
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை தாசில்தார் அலுவலகத்தில் நேற்று முன்தினம் கலெக்டர் சாருஸ்ரீ தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது. இந்த ஜமாபந்தி வருகிற 30-ந்தேதி வரை (சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை தவிர) நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது.
நேற்று முன்தினம் நடந்த பாலையூர் உள்வட்டம் உள்பட்ட பாலையூர், மானங்காத்தான் கோட்டகம், வெங்கத்தான்குடி, குறிச்சிமூலை-2, நாராயணபுரம் களப்பால், குறிச்சிமூலை-1, நருவளிகளப்பால், தெற்கு நாணலூர், பெருவிடைமருதூர், குலமாணிக்கம், பெருகவாழ்ந்தான்-1, மண்ணுக்குமுண்டான், தேவதானம், பெருகவாழ்ந்தான்-2, செருகளத்தூர், சித்தமல்லி, நொச்சியூர், புத்தகரம் ஆகிய 18 கிராமங்களுக்கு ஜமாபந்தி நடந்தது.
விரைந்து நடவடிக்கை
ஜமாபந்தியில் பொதுமக்கள் கலந்து கொண்டு முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, பட்டாமாறுதல், பட்டா உட்பிரிவு மாற்றம், அடிப்படை வசதிகள் குறித்து 103 கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர். இதில் 2 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு மின்னணு குடும்ப அட்டை 2 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் சாருஸ்ரீ உத்தரவிட்டார்.
இதில் முத்துப்பேட்டை தாசில்தார் மகேஷ்குமார், தனி தாசில்தார்கள் மலர்கொடி, சிவக்குமார், வட்ட வழங்கல் அலுவலர் வசுமதி, வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார், பேரூராட்சி செயல் அலுவலர் யசோதா உட்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.