குயின்மீரா சர்வதேச பள்ளி ஆண்டு விழா: கல்வி போல் விளையாட்டிலும் மாணவர்கள் அதிக ஆர்வம் காட்ட வேண்டும் -மதுரை எம்.பி. பேச்சு


குயின்மீரா சர்வதேச பள்ளி ஆண்டு விழா: கல்வி போல் விளையாட்டிலும் மாணவர்கள் அதிக ஆர்வம் காட்ட வேண்டும் -மதுரை எம்.பி. பேச்சு
x

குயின்மீரா சர்வதேச பள்ளி ஆண்டு விழாவில் பேசிய மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், கல்வி போல் விளையாட்டிலும் மாணவர்கள் அதிக ஆர்வம் காட்ட வேண்டும் என்றார்.

மதுரை


குயின்மீரா சர்வதேச பள்ளி ஆண்டு விழாவில் பேசிய மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், கல்வி போல் விளையாட்டிலும் மாணவர்கள் அதிக ஆர்வம் காட்ட வேண்டும் என்றார்.

ஆண்டு விழா

மதுரை குயின்மீரா சர்வதேச பள்ளியின் 10-வது ஆண்டு விழா "சங்கமம் - 23" என்ற பெயரில் நேற்று பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளி தலைவர் டாக்டர் சந்திரன் தலைமை தாங்கினார். பள்ளியின் நிர்வாக இயக்குனர் அபிநாத் சந்திரன் முன்னிலை வகித்தார். கல்வி இயக்குனர் சுஜாதா குப்தன் வரவேற்றார்.

இதில் சிறப்பு விருந்தினர்களாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், மதுரை சரக டி.ஐ.ஜி.பொன்னி, மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் எம்.பி. சு.வெங்கடேசன் பேசியதாவது:-

விளையாட்டிலும் ஆர்வம்

ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் கல்வி மிக முக்கியமான ஒன்றாகும். கல்வி மட்டுமே ஒருவரை சிறந்த மாணவனாக, நல்ல தலைவனாக உருவாக்கும். சமூகத்தில் நல்ல நிலையை பெற்று கொடுக்கும் வாய்ப்பு கல்விக்கு மட்டுமே உண்டு. பள்ளி வாழ்க்கை முக்கியமானது. அதைவிட நண்பர்கள், ஆசிரியர்கள் மிக முக்கியமானவர்கள். அவர்கள் ஒத்துழைப்பின் மூலமே வாழ்க்கை நல்ல நிலைக்கு உருவாக்க முடியும். தற்போதுள்ள மாணவர்களிடம் படைப்பாற்றல் அதிகமாகி வருகிறது.

அதுபோல் விளையாட்டிலும் மாணவர்கள் அதிக ஆர்வம் காட்ட வேண்டும். விளையாட்டானது, வெற்றி -தோல்வியை கற்று கொடுக்கும். மேலும் தோல்வியை சந்தித்து அதிலிருந்து எவ்வாறு மீண்டு எழுந்து வெற்றி பெறுவது என்பதை உணர்த்தும் தன்மை கொண்டதாகும். அதனால் கல்வியை எவ்வளவு முக்கியமாக கருதுகிறோமோ, அதே அளவிற்கு விளையாட்டிலும் ஆர்வம் காட்ட வேண்டும். அப்போதுதான் வெற்றி தோல்விகளை எளிதாக கையாள முடியும். பொதுவாக மாணவர்களுக்கு தன்னம்பிக்கை என்பது அதிக அளவில் இருக்க வேண்டும். அப்போதுதான் தங்களுக்கான இலக்கினை நோக்கி முன்னேற முடியும். மதுரைக்கு பல பெருமைகள் உள்ளன. கல்வி அறிவிலும் மதுரை சிறப்பு மிகுந்த நகரம் என்பதை அனைவரும் அறிய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பரிசுகள்

முன்னதாக மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இது போல் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில், துணை இயக்குனர் (நிர்வாகம்) ஜோஸ்பின் அன்னி ஷீபாஅருள் தாஸ், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story