உல்லாசமாக இருந்து விட்டு இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுத்த வாலிபர் கைது
திருச்செந்தூர் அருகே உல்லாசமாக இருந்து விட்டு இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அருகே உல்லாசமாக இருந்து விட்டு இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுத்த வாலிபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரது தாய், தந்தையரை போலீசார் தேடிவருகின்றனர்.
இளம்பெண்ணுடன் உல்லாசம்
திருச்செந்தூர் அருகே காயாமொழி தேரிக்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகன் பாலமுருகன்(வயது 33). திருமணமாகாதவர். சொந்தமாக விவசாயம் செய்து வருகிறார்.
இவர்களது வீட்டில் அதே பகுதியை சேர்ந்த 27 வயதுள்ள இளம்பெண் ஒருவர் கடந்த 2015-ம் ஆண்டிலிருந்து வீட்டு வேலை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் பாலமுருகனுக்கும், அந்த இளம்பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பாலமுருகன் திருமணம் ெசய்து கொள்வதாக கூறி அந்த இளம் பெண்ணிடம் பலமுறை தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளார்.
திருமணத்திற்கு மறுப்பு
இது அக்கம் பக்கத்தினருக்கு தெரிய வந்த நிலையில், அந்த இளம் பெண், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பாலமுருகனை வலியுறுத்தியுள்ளார். இதற்கு பாலமுருகனின் தந்தை ஜெயராமனும், தாயார் பிரம்மசக்தியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் அந்த இளம்பெண்ணை அவதூறாக பேசியதுடன், கொலை மிரட்டல் விடுத்து வீட்டு வேலைக்கு வராமல் நிறுத்தி விட்டனராம்.
கைது
இதையடுத்து அந்த இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் திருச்செந்தூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுரிமனோகரி வழக்கு பதிவு செய்து, பாலமுருகனை கைது செய்தார். மேலும் தலைமறைவான அவருடைய தந்தை, தாயாரை போலீசார் தேடி வருகின்றனர்.