ராதாபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் முப்பெரும் விழா
ராதாபுரம் அரசு தொழிற்பயிற்சி நடந்த முப்பெரும் விழாவில் சபாநாயகர் அப்பாவு பங்கேற்றார்.
ராதாபுரம்:
ராதாபுரம் அரசு தொழிற்பயிற்சி நடந்த முப்பெரும் விழாவில் சபாநாயகர் அப்பாவு பங்கேற்றார்.
முப்பெரும் விழா
ராதாபுரத்தில் அரசு தொழிற்பயிற்சி மையம் முன்பு ரூ.7 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை கட்ட அடிக்கல் நாட்டு விழா, தொழிற்பயிற்சி நிலையத்தில் ஸ்மார்ட் வகுப்பறை தொடக்க விழா, அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அரசு தொழிற்பயிற்சி மண்டல பயிற்சி இணை இயக்குனர் செல்வகுமார் தலைமை தாங்கினார். அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் லட்சுமணன் வரவேற்று பேசினார்.
சபாநாயகர் அப்பாவு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயணிகள் நிழற்குடை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் 110 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். தொடர்ந்து அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் வகுப்பறையை தொடங்கி வைத்து, மாணவ-மாணவிகளுக்கு கணித பாடத்தை சபாநாயகர் அப்பாவு சிறிது நேரம் நடத்தினார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
புதிய பாடப்பிரிவுகள்
மாணவ-மாணவிகள் படித்து முடித்தவுடன் வேலைவாய்ப்பு பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் அரசு சார்பில் தொழிற்பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தமிழக மாணவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு 'நான் முதல்வன்' திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.
ராதாபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.35.60 கோடி மதிப்பீட்டில் அதிநவீன உபகரணங்கள் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளது. இங்கு தொழிற்பயிற்சி முடித்தவுடன் வேலைவாய்ப்பில் முன்னுரிமை கிடைக்கும் வகையில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இங்கு பிட்டர், வெல்டர், எலக்ட்ரீசியன், குளிர்சாதன பராமரிப்பு போன்ற பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு முதல் மேலும் 3 பாடப்பிரிவுகள் புதிதாக தொடங்கப்பட உள்ளது.
தமிழகம் முழுவதும் மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.3 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். விஜயாபதி தாமஸ் மண்டபம் அருகில் ரூ.20 கோடியில் சர்வதேச தரத்துடன் விளையாட்டு அரங்கம் மற்றும் ராதாபுரத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினா்.
பின்னர் ராதாபுரம் தாலுகா அலுவலகம் முன்பு தீயணைப்பு நிலையம் அமைப்பதற்கான இடத்தை சபாநாயகர் அப்பாவு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ராதாபுரம் பஞ்சாயத்து தலைவர் பொன்மீனாட்சி அரவிந்தன் உள்பட பலர் உடன் சென்றனர்.