வேறு சாதி பெண்ணை காதலித்ததால் ஆத்திரம்: மகனை உயிரோடு கொளுத்திய தாய்


வேறு சாதி பெண்ணை காதலித்ததால் ஆத்திரம்: மகனை உயிரோடு கொளுத்திய தாய்
x

வேறு சாதி பெண்ணை காதலித்த மகனை தாய் உயிரோடு கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை,

கோவை சுக்ரவார்பேட்டையை சேர்ந்தவர் குழந்தைவேல் (வயது58). இவருடைய மனைவி ராணி (52). இவருடைய மகன் குமார் (28). கட்டிட தொழிலாளி. இந்தநிலையில், குமாருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். இதற்காக அவர்கள் பெண் பார்த்து வந்தனர். இதை அறிந்த குமார், பெற்றோரிடம் தான் ஒரு இளம்பெண்ணை காதலித்து வருவதாகவும், அந்த பெண்ணைதான் திருமணம் செய்து கொள்வேன் என்றும் கூறியதாக தெரிகிறது. அந்த பெண் யார் என்பது குறித்து பெற்றோர் கேட்டனர்.

காதலுக்கு எதிர்ப்பு

இதில் அந்த பெண் வேறு சாதியை சேர்ந்தவர் என்பதால் காதலுக்கு அவருடைய தாயார் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் வீட்டில் தாய்க்கும், மகனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. இதுதொடர்பாக நேற்று முன்தினம் மாலை ராணிக்கும், குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரத்தில் வீட்டைவிட்டு வெளியே சென்ற குமார் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். இதையடுத்து அவர் வீட்டில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டே தனது காதலியுடன் செல்போனில் பேசிக்கொண்டு இருந்ததாக தெரிகிறது. இதனால் ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்த ராணி, குமார் மீது வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை எடுத்து ஊற்றி திடீரென்று தீ வைத்தார்.

வழக்கு பதிவு

இதனால் அதிர்ச்சி அடைந்த குமார் சுதாரித்துக் கொண்டு தன்மீது பற்றி எரிந்த தீயை அணைத்தார். தீப்பிடித்ததில் அவருடைய வாய், முகம் உள்பட இடங்களில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர், சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் ராணி மீது ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story