புது செருப்பில் இயற்கை உபாதையை கழித்ததால் ஆத்திரம்:நாயை கொன்று முகநூலில் புகைப்படம் பதிவிட்ட வாலிபருக்கு வலைவீச்சு


புது செருப்பில் இயற்கை உபாதையை கழித்ததால் ஆத்திரம்:நாயை கொன்று முகநூலில் புகைப்படம் பதிவிட்ட வாலிபருக்கு வலைவீச்சு
x

வாலிபருக்கு வலைவீச்சு

ஈரோடு

சென்னிமலை அருகே புது செருப்பின் மீது நாய், இயற்கை உபாதையை கழித்ததால், ஆத்திரத்தில் அதனை கொன்று புகைப்படத்தை முகநூலில் பதிவிட்ட வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

போலீசில் புகார்

ஈரோடு பழையபாளையம் சுத்தானந்தன் நகரை சேர்ந்த விலங்குகள் நல அமைப்பை சேர்ந்த பிரேம்குமார் என்பவர் முகநூல் (பேஸ் புக்) பக்கத்தை பார்த்துள்ளார். அதில் இறந்து கிடந்த நாயின் புகைப்படம் ஒன்றை ஒருவர் பதிவிட்டு அதில் 'தான் வாங்கி வைத்த புது செருப்புல இயற்கை உபாதை கழித்து அசிங்கம் செய்து வந்ததால் போட்டு தள்ளிட்டேன்' என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் அந்த புகைப்படம் கடந்த 9-ந் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பிரேம்குமார், நாயை கொன்று அதன் புகைப்படத்தை முகநூலில் பதிவிட்ட நபர் மீது விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி சென்னிமலை போலீசில் புகார் செய்தார்.

பெரியகுளத்தை சேர்ந்தவர்

அதன்பேரில் சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், 'நாயை கொன்று அதன் புகைப்படத்தை முகநூலில் பதிவிட்ட நபர் தேனி மாவட்டம், பெரியகுளம், மங்களம் பகுதியை சேர்ந்த பழனிவேல் என்பவரின் மகன் தினேஷ் (வயது 25) என்பதும், அவர் ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே ஈங்கூரில் தங்கி இருந்து கட்டுமான பணிகளுக்கு சென்ட்ரிங் வேலை செய்து வந்ததும்' தெரியவந்தது.

மேலும் அவர் புதிதாக வாங்கிய செருப்பின் மீது அங்கு சுற்றித்திரிந்த நாய் ஒன்று இயற்கை உபாதையை கழித்ததால், ஆத்திரத்தில் அடித்து கொன்றதும் தெரிந்தது.

வலைவீச்சு

இதைத்தொடர்ந்து நாயை கொன்ற தினேஷ் மீது சென்னிமலை போலீசார் விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனிடையே தினேஷ் தலைமறைவாகி விட்டார். இதனால் அவரை சென்னிமலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் நாயை கொன்று அந்த புகைப்படத்தை முகநூலில் பதிவிட்ட தினேசுக்கு சமூக வலைதளங்களில் பலரும் கண்டனங்களை தெரிவித்து உள்ளனர்.


Next Story