ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்; 10 பேர் காயம்


திருமயம் அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 500-க்கும் மேற்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்தன. இதில் மாடுகள் முட்டி 10 பேர் காயம் அடைந்தனர்.

புதுக்கோட்டை

ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மலையகோவில் திருவிழாவையொட்டி நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், தஞ்சாவூர், மதுரை, தேனி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. பின்னர் கால்நடை துறை மூலம் காளைகளை பரிசோதனை செய்து ஒன்றன்பின் ஒன்றாக களத்தில் இறக்கினார்கள்.

களத்தில் சீறிப்பாய்ந்து ஓடிய காளைகளை 250-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் போட்டிப்போட்டு மடக்கிப்பிடித்தனர். சில காளைகள் மாடுபிடி வீரர்களிடம் பிடிபடாமல் சீறிப்பாய்ந்து ஓடின. பல காளைகள் களத்தில் இறங்கி விளையாடியது.

10 பேர் காயம்

இதைப்பார்த்த இளைஞர்கள் விசில் அடித்து ஆரவாரம் செய்தனர். சில காளைகளை நெருங்குவதற்கு மாடுபிடி வீரர்கள் பயந்தனர். இதில் வீரர்களை திணறடித்து வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கும், சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் பார்வையாளர்கள் உள்பட 10 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு நச்சாந்துப்பட்டி சுகாதார துறை குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

ஜல்லிக்கட்டை ஏராளமானோர் மரத்தின் மீதும் வாகனங்களின் மீதும் ஏறி நின்று கண்டு ரசித்தனர்.

பொன்னமராவதி போலீஸ் துணை சூப்பிரண்டு அப்துல்ரகுமான் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை விழா குழுவினர் செய்திருந்தனர்.


Next Story