ராகுல்காந்தி மேற்கொள்ளும் நடைபயணம் சமூக புரட்சி்யாகும் - கே.எஸ்.அழகிரி


ராகுல்காந்தி மேற்கொள்ளும் நடைபயணம் சமூக புரட்சி்யாகும் - கே.எஸ்.அழகிரி
x

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் ராகுல்காந்தி மேற்கொள்ளும் நடைபயணம் சமூக புரட்சியாகும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி கூறினார்.

நாகர்கோவில்:

கன்னியாகுமரியில் இருந்து வருகிற 7-ந் தேதி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடைபயணம் யாத்திரையை தொடங்க இருக்கிறார். இதுதொடர்பாக நாகர்கோவிலில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் நதமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

நீண்டதூர நடைபயணம்

ராகுல்காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 3500 கி.மீ. தூரத்தை 150 நாட்களில் நடந்து கடக்கிறார். நடைபயணத்தின் முக்கிய நோக்கம், இந்திய மக்களை ஒன்றிணைக்க வேண்டும் என்பதுதான்.

மக்களை பிரித்து வைக்க வேண்டும் என்பதில், சனாதன தர்மத்தை நிலைநாட்ட வேண்டும் என்பதில் பா.ஜனதா உறுதியாக இருக்கிறது. ஆனால் ராகுல்காந்தி தமிழகத்தில் இருந்து இந்த பயணத்தை தொடங்குகிறார்.

இது தமிழக காங்கிரசுக்கும், தமிழக மக்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்க்கக்கூடிய விஷயம். வரலாற்று சிறப்புமிக்க இந்த நடைபயணம் நமது மாநிலத்தில் இருந்து தொடங்குவது நமக்கு மிகுந்த பெருமையையும், மகிழ்ச்சியையும் தருகிறது.

இந்த தேசத்தின் இறையாண்மையை காப்பாற்றுவதற்காக, பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக, மக்களிடையே ஒற்றுமையை பரப்புவதற்கான இந்த நடைபயணத்தை நாங்கள் பயன்படுத்திக் கொள்கிறோம். இது ஒரு நீண்டதூர நடைபயணம்.

மத்திய மந்திரி மிரட்டல்

தெலுங்கானாவில் மத்திய நிதி மந்திரி அதிகாரிகளை மிரட்டிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. எல்லாவித மானியங்களுக்கும், உதவிகளுக்கும் மத்திய அரசும், மாநில அரசும் கொடுக்கிறது. அதனால் எலலாவற்றிலும் பிரதமர் படத்தை போடவேண்டும் என்ற முறை எதுவும் கிடையாது.

மாநில அரசு கையில்தான் நிர்வாகம் இருக்கிறது. நிதி மந்திரி என்ன செய்திருக்கலாம் என்றால் மாநில அரசுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கலாம். இனிமேல் வருங்காலத்தில் இப்படி செய்தால் நன்றாக இருக்கும் என்று கடிதம் எழுதி இருக்கலாமே ஒழிய, மாவட்ட கலெக்டரை அந்த மாநிலத்தில் போய் நேருக்கு நேராக மிரட்டுவது என்பது மரபும் கிடையாது.

அந்த உரிமையும் மத்திய நிதி மந்திரிக்கு கிடையாது. முதல்-அமைச்சர் தைரியமாக எதிர்வினையாற்றி இருந்தால் நிலைமை வேறு மாதிரி போய்இருக்கும். மத்திய நிதி மந்திரி நடந்து கொண்ட விதம் தவறு என்பது என்னுடைய கருத்து.

சமூக புரட்சி

கேரளாவில் நடந்த தென்மாநில கவுன்சில் கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் கூறிய கருத்துக்கள் மிகவும் சரியானதுதான். ராகுல்காந்தி நடைபயண நேர விவரத்தை நாளை (அதாவது இன்று) வெளியிடுவோம்.

மத்திய அரசு எதையும் ஜனநாயக ரீதியாகவோ, கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையிலோ நோக்குவது கிடையாது. மோடி அவ்வளவு பெருந்தன்மையானவர் அல்ல. தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் தெரிவித்த கோரிக்கைகளை பெரிதாக அவர் மனதில் எடுத்துக் கொள்ள மாட்டார் என்பது எனது கருத்து.

அதற்காக நாம் சொல்லாமல் இருக்க முடியாது. திரும்ப, திரும்ப சொல்ல வேண்டும். போராட வேண்டும். கன்னியாகுமரி- காஷ்மீர் வரையில் ராகுல்காந்தி மேற்கொள்ளும் நடைபயணம் சமூக புரட்சியாகும். சமூக மாற்றத்தை மனதில் வைத்து இந்த நடைபயணத்தை நாங்கள் தொடங்குகிறோம்.


Next Story