'இந்திய ஒற்றுமை பாதயாத்திரை' - ராகுல் காந்தி சென்னை வந்தடைந்தார்


இந்திய ஒற்றுமை பாதயாத்திரை - ராகுல் காந்தி சென்னை வந்தடைந்தார்
x

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலான பாத யாத்திரையை ராகுல்காந்தி நாளை தொடங்க உள்ளார்.

சென்னை,

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல்காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 'பாரத் ஜோதா யாத்ரா' என்ற இந்திய ஒற்றுமை பாதயாத்திரையை நாளை மேற்கொள்ள உள்ளார்.

பொருளாதாரம், அரசியல், சமூகம் என அனைத்து வகையிலும் பிளவுபட்டுள்ள இந்தியாவை ஒன்றிணைக்க இந்த பாதயாத்திரை நடத்தப்பட உள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக பாதயாத்திரை நடைபெறுகிறது. மொத்தம் 150 நாட்கள் நடைபெறும் இந்த பாதயாத்திரை மூலம் ராகுல்காந்தி 3,570 கி.மீ. தூரம் நடந்து காஷ்மீரை அடைய உள்ளார்.

இந்த பாதயாத்திரையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், அகில இந்திய நிர்வாகிகள், அந்தந்த மாநில நிர்வாகிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநில காங்கிரஸ் கூட்டணி கட்சி தலைவர்களும் ராகுல்காந்தியை சந்தித்து வாழ்த்த உள்ளனர். இந்த பாதயாத்திரை நாளை (புதன்கிழமை) கன்னியாகுமரியில் இருந்து தொடங்கப்படுகிறது.

இந்நிலையில், இந்திய ஒற்றுமை பாதயாத்திரையில் பங்கேற்பதற்காக ராகுல்காந்தி இன்று இரவு சென்னை வந்தடைந்தார். இரவு 9.30 மணியளவில் டெல்லியில் இருந்து விமானம் மூலம் ராகுல்காந்தி சென்னை வந்தடைந்தார்.

சென்னை விமான நிலையம் வந்தடைந்த ராகுல்காந்தியை அக்கட்சியின் தமிழ்நாடு தலைவர்கள் வரவேற்றனர். ராகுல்காந்தி இன்று இரவு சென்னையில் தங்குகிறார். பின்னர், நாளை காலை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது தந்தை ராஜீவ்காந்தியின் நினைவிடத்தில் ராகுல்காந்தி மரியாதை செலுத்துகிறார்.

அதன் பின்னர் சென்னையில் இருந்து விமானம் மூலம் கேரள மாநிலம் திருவனந்தபுரம் செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ராகுல்காந்தி நாளை மதியம் 1.45 மணியளவில் நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள ஹெலிபேடில் வந்து இறங்குகிறார். அதன் பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு ராகுல் காந்தி பாரத் ஜோதா யாத்ரா' என்ற இந்திய ஒற்றுமை பாதயாத்திரையை தொடங்குகிறார்.


Next Story