நடைமேடைகளில் மேற்கூரை முழுமையாக அமைக்கப்படுமா?- பயணிகள்
தஞ்சை ரெயில் நிலையத்தில் நடைமேடைகளில் மேற்கூரை முழுமையாக அமைக்கப்படுமா? என பயணிகள் எதிர்பார்கின்றனர்.
தஞ்சை ரெயில் நிலையத்தில் நடைமேடைகளில் மேற்கூரை முழுமையாக அமைக்கப்படுமா? என பயணிகள் எதிர்பார்கின்றனர்.
தஞ்சை ரெயில் நிலையம்
தஞ்சை ரெயில் நிலையம் மிகவும் தொன்மை வாய்ந்தது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் திருச்சி-நாகை வழித்தடம், அவர்களின் வாணிப போக்குவரத்துக்கு பெரிதும் பயன்படுத்தப்பட்டது. அப்போது அந்த வழித்தடம் அகல ரெயில்பாதையாக இருந்தது.
பின்னர் குறுகிய ரெயில் பாதையாக மாற்றப்பட்டு, மீண்டும் அகல ரெயில் பாதையாக்கப்பட்டது. சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லவும், தென்மாவட்டங்களில் இருந்து சென்னை போன்ற நகரங்களுக்கு செல்லவும் முக்கிய வழித்தடமாக தஞ்சை இருந்தது.
தென்மாவட்டங்கள்
இந்த வழித்தடத்தை மெயின் லைனாக இருந்தது. நாளடைவில் திருச்சி-விழுப்புரம் இடையே ரெயில்பாதை அமைக்கப்பட்ட பின்னர் தஞ்சை வழியாக தென்மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட பெரும்பாலான ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.
தற்போது தஞ்சை வழியாக சென்னை, ராமேஸ்வரம், திருப்பதி, வாரணாசி, பைசாபாத், பெங்களூரு, புதுச்சேரி, திருச்செந்தூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோவை, செங்கோட்டை போன்ற இடங்களுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில்களும், தஞ்சையில் இருந்தும், தஞ்சை வழியாகவும் மயிலாடுதுறை, திருச்சி, நாகை, நாகூர், காரைக்கால், வேளாங்கண்ணி போன்ற இடங்களுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
நடைமேடைகள்
தஞ்சை ரெயில் நிலையத்தில் 5 நடைமேடைகளும், 7 ரெயில்வே பாதைகளும் உள்ளன. நாள்தோறும் ஏராளமான எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுவதால் தஞ்சை ரெயில் நிலையம் எப்போதும் பரபரப்புடன் காணப்படுகிறது. மேலும் பஸ் கட்டணத்தை விட ரெயில் கட்டணம் குறைவு என்பதால் ரெயில்களில் பயணிகள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
திருச்சி கோட்டத்தில் திருச்சிக்கு அடுத்தபடியாக அதிக வருவாய் ஈட்டித்தரும் ரெயில் நிலையங்களில் தஞ்சை ரெயில் நிலையம் முதன்மையாக விளங்கி வருகிறது. இந்த ரெயில் நிலையங்களில் உள்ள நடைமேடைகளில் பயணிகளின் வசதிக்காக மேற்கூரை அமைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இந்த மேற்கூரை முழுமையாக எல்லா இடங்களிலும் அமைக்கப்படவில்லை.
பயணிகள் சிரமம்
இதனால் பகல் நேரத்தில் ரெயிலுக்காக காத்திருக்கக்கூடிய மக்களால் மேற்கூரை அமைக்கப்படாத இடங்களில் நிற்க முடியவில்லை. ஏனென்றால் வெயில் தாக்கம் இருப்பதால் அந்த இடத்தை விட்டு தள்ளி மேற்கூரை அமைக்கப்பட்டுள்ள இடத்திற்கு சென்று நிற்கின்றனர்.
ரெயில் வரும்போது மீண்டும் வெயில் விழக்கூடிய இடத்திற்கு வந்து தான் தாங்கள் ஏறக்கூடிய பெட்டிகளை எதிர்பார்த்து நிற்க வேண்டிய நிலை உள்ளது. அந்த நேரத்தில் வயதானவர்கள் மிகவும் சிரமப்படக்கூடிய நிலை உள்ளது. மேலும் பயணிகள் தாங்கள் கொண்டு வந்துள்ள உடமைகளை தூக்கி கொண்டு வேகமாக வர வேண்டிய சூழ்நிலையும் உள்ளது.
எதிர்பார்ப்பு
வெயில் காலங்களில் கூட கொஞ்சநேரம் பெட்டிகளை எதிர்பார்த்து காத்து நிற்கலாம். ஆனால் மழை காலங்களில் பெட்டிக்காக காத்திருக்கும்போது மழையில் முழுமையாக நனைய வேண்டிய நிலை உள்ளது. இதனால் மேற்கூரை இல்லாத இடங்களில் மேற்கூரை அமைக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இது குறித்து ரெயில் பயணிகள் உபயோகிப்பாளர் சங்கத்தினர் கூறும்போது, 1-வது நடைமேடையில் இடை, இடையே மேற்கூரை அமைக்கப்படாமல் உள்ளது. 2 மற்றும் 3-வது நடைமேடைகளில் மேற்கூரை இல்லாத காரணத்தினால் வெயில், மழையால் பயணிகள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. தஞ்சை வழியாக நிறைய ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
சுரங்கப்பாதை
இதனால் பயணிகளும் அதிகஅளவில் வந்து செல்வதால் அவர்களின் வசதிக்காக மேற்கூரைகள் முழுமையாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பயணிகள் அமருவதற்காக இருக்கைகள் போதுமான அளவு அமைக்கப்பட்டு இருந்தாலும் மேற்கூரை இல்லாத காரணத்தினால் பகலில் பெரும்பாலான இருக்கைகள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
மழை காலங்களில் பயணிகள் டிக்கெட் எடுக்கும் அறை இருக்கும் பகுதிகளில் மழை தண்ணீர் தேங்குவதால் பயணிகளால் அமர முடியாத நிலை உள்ளது. 1 மற்றும் 2-வது நடைமேடையை இணைக்கும் வகையில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த சுரங்கப்பாதை முழுமை பெறும் வகையில் 3 மற்றும் 4, 5-வது நடைமேடையை இணைக்கும் வகையில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும்.
திருச்சியை போல் தஞ்சை ரெயில் நிலையத்திலும் ஸ்கேன் கருவி, நிரந்தரமாக மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் அவசியம் சோதனை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.
அனைத்து நடைமேடைகளிலும் மேற்கூரை...
இதுகுறித்து தஞ்சை சேவியர் நகரை சேர்ந்த டாக்டர் தமிழரசன் கூறும்போது, தஞ்சை ரெயில் நிலையத்தில் இருந்து நாள்தோறும் பல்வேறு எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரெயில்கள் இயக்கப்படுவதால் ரெயில் நிலையம் எப்போதும் பரபரப்புடன் காணப்படும். முதலாவது நடைமேடையில் மேற்கூரைகள் முழுவதும் வேயப்படாமல் ஆங்காங்கே மட்டும் வேயப்பட்டு உள்ளது. இதனால் பகல் நேரங்களில் முதலாவது நடைமேடையில் இருந்து இயக்கப்படும் ரெயில்களில் பயணம் செய்வதற்காக காத்து இருக்கும் பயணிகள் வெயிலிலும், மழைக்காலங்களில் மழையில் நனைந்தும் அவதிப்பட்டு வருகிறார்கள். மூன்றாவது மற்றும் நான்காவது நடைமேடைகளிலும் இதேநிலையே காணப்படுகிறது.
சென்னை, மதுரை, கோவை போன்ற ஊர்களுக்கு மட்டுமல்லாது கோவா ேபான்ற வெளி மாநிலங்களுக்கும் இங்கிருந்து பயணிகள் அதிக அளவில் பயணம் செய்து வருகிறார்கள். எனவே தஞ்சை ரெயில் நிலையத்தில் உள்ள அனைத்து நடைேமடைகளிலும் மேற்கூரை அமைத்து வெயில் மற்றும் மழைக்காலங்களில் இருந்து பயணிகளை காக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தஞ்சைக்கு சுற்றுலா வரும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணிகளை கருத்தில் கொண்டு உடனடியாக அனைத்து நடைமேடைகளிலும் மேற்கூரை அமைத்து தர வேண்டும் என்றார்.