விழுப்புரம்- மயிலாடுதுறை மற்றும் திருச்சி-தஞ்சை பயணிகள் ரெயில்களை திருவாரூர் வரை நீட்டிக்க வேண்டும்
விழுப்புரம்- மயிலாடுதுறை மற்றும் திருச்சி-தஞ்சை பயணிகள் ரெயில்களை திருவாரூர் வரை நீட்டிக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.
விழுப்புரம்- மயிலாடுதுறை மற்றும் திருச்சி-தஞ்சை பயணிகள் ரெயில்களை திருவாரூர் வரை நீட்டிக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.
ரெயில் பயணிகள் வலியுறுத்தல்
மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் வருவதற்கு தினமும் இரவு 7.47 மணிக்கு பெங்களூர்- காரைக்கால் ரெயில், வாரத்திற்கு 3 நாட்கள் இரவு 8.10 மணிக்கு இயக்கப்படும் திருப்பதி- மன்னார்குடி ரெயில் ஆகிய ரெயில்களை விட்டால் வேறு ரெயில்கள் இல்லை.
இதேபோல் திருவாரூரில் இருந்து திருச்சி செல்வதற்கும் போதிய ரெயில்கள் இல்லை. எனவே விழுப்புரம்- மயிலாடுதுறை, திருச்சி- தஞ்சை ஆகிய பயணிகள் ரெயில்களை திருவாரூர் வரை நீட்டிக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து திருவாரூர் மாவட்ட ரெயில் உபயோகிப்பாளர் சங்க செயலாளர் பாஸ்கரன் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளரை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார்.
அதில் கூறியதாவது:-
விழுப்புரத்தில் இருந்து மாலை 6.10 மணிக்கு மயிலாடுதுறைக்கு புறப்படும் பயணிகள் ரெயிலை இரவு 9.30-க்கு மயிலாடுதுறையில் இருந்து புறப்பட்டு திருவாரூர் வரும் வகையில் நீட்டிக்க வேண்டும்.
அதேபோல் காலை 6 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரம் செல்லும் ரெயிலை அதிகாலை 5 மணிக்கு திருவாரூரில் இருந்து இயக்க வேண்டும்.
திருச்சி-தஞ்சை
இரவு 8.25 மணிக்கு திருச்சியில் இருந்து தஞ்சை வரை இயக்கப்படும் பயணிகள் ரெயிலை திருவாரூர் வரை நீட்டிக்க வேண்டும். இதே ரெயிலை அதிகாலை 5 மணிக்கு திருவாரூரில் இருந்து திருச்சி வரை இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருத்துறைப்பூண்டி- அகஸ்தியம்பள்ளி ரெயிலை தினமும் திருச்சியில் இருந்து அல்லது குறைந்தபட்சம் திருவாரூரில் இருந்தாவது இயக்க வேண்டும்.
செகந்திராபாத்- ராமநாதபுரம் வாராந்திர சிறப்பு ரெயில் மற்றும் எர்ணாகுளம்- வேளாங்கண்ணி- எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரெயில்களை வாரம் 2 முறை நிரந்தர சிறப்பு ரெயில்களாக இயக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.