காவிரி விவசாயிகள் சங்கத்தினர் ரெயில்-சாலை மறியல்
தமிழகத்திற்கு காவிரி நீரை பெற்றுத்தராத மத்திய அரசை கண்டித்து திருவாரூரில், காவிரி விவசாயிகள் சங்கத்தினர் ரெயில் மறியல் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட பி.ஆர்.பாண்டியன் உள்பட 170 பேரை போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்திற்கு காவிரி நீரை பெற்றுத்தராத மத்திய அரசை கண்டித்து திருவாரூரில், காவிரி விவசாயிகள் சங்கத்தினர் ரெயில் மறியல் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட பி.ஆர்.பாண்டியன் உள்பட 170 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரெயில் மறியல்
காவிரி டெல்டாவில் கருகும் பயிரை காப்பாற்றவும், சம்பா சாகுபடியை தொடங்கிடவும், ஆணையத்தின் உத்தரவை ஏற்று கர்நாடகாவிடம் இருந்து தண்ணீரை பெற்றுத்தராத மத்திய அரசை கண்டித்தும் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் ரெயில் மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர்.
அதன்படி தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தினர் திருவாரூர் ரெயில் நிலையம் முன்பு உள்ள ரெயில்வே மேம்பாலம் அருகில் திரண்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் ரெயில் நிலையத்துக்குள் சென்று ரெயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து மன்னார்குடியில் இருந்து திருவாரூர் வழியாக மயிலாடுதுறை செல்லும் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
170 பேர் கைது
இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் அசோகன், கிருஷ்ணமணி, செந்தில்குமார், சுப்பையன், சரவணன், நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட பி.ஆர்.பாண்டியன் உள்பட 170 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த மறியல் போராட்டத்தால் அரை மணி நேரம் காலதாமதமாக மயிலாடுதுறைக்கு ரெயில் புறப்பட்டு சென்றது.
இந்த போராட்டத்தையொட்டி திருவாரூர் ரெயில் நிலைய வளாகத்தில் போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
போராட்டத்தை தீவிரமாக்குவோம்
முன்னதாக பி.ஆர்.பாண்டியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
குறுவை இழப்பிற்காக ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம், சம்பா ஊக்க நிதியாக ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை உடனடியாக மத்திய, மாநில அரசுகள் வழங்கிட வேண்டும். காவிரி டெல்டாவில் 3 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் குறுவை பயிர் கருக தொடங்கி விட்டது. 15 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி பணிகளை தொடங்க முடியாமல் விவசாயிகள் பரிதவிக்கின்றனர். காவிரி ஆணையத்தின் உத்தரவை ஏற்க மறுக்கும் கர்நாடகாவிற்கு, மத்திய அரசு, அரசியல் லாப நோக்கத்தோடு மறைமுகமாக துணை போகிறது. கருகும் பயிரை காப்பாற்ற ஆணையத்தின் உத்தரவை ஏற்று செயல்படுத்த வேண்டிய மத்திய அரசு மவுனம் காத்து வருகிறது. மத்திய அரசு உடனடியாக ஆணைய உத்தரவின் அடிப்படையில் தண்ணீரை பெற்றுத்தர வலியுறுத்தி போராட்டம் நடத்தியுள்ளோம். இது மத்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்கான வகையில் நடைபெறும் முதற்கட்ட போராட்டமாகும். மத்திய அரசு தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படுமேயானால் போராட்டத்தை தீவிரமாக்குவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
சாலை மறியல்
திருவாரூர்-திருத்துறைப்பூண்டி தேசிய நெடுஞ்சாலையில் பாண்டவையாற்று பாலம் அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருவாரூர் தாலுகா போலீசார் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அதிகாரிகள் அளித்த வாக்குறுதியினை ஏற்று மறியல் போராட்டத்தை கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் திருவாரூர்-திருத்துறைப்பூண்டி சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.