ரூ.25 கோடியில் ரெயில்வே மேம்பால பணிகள்
ஆம்பூர் அருகே ரூ.25 கோடியில் நடைபெறும் ரெயில்வே மேம்பால பணிகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.
ரூ.25 கோடியில் மேம்பாலம்
ஆம்பூர் வட்டம் கண்ணாடி குப்பம் அய்யனூர் சாலையில் கடந்த 2011-ம் ஆண்டு ெரயில்வே மேம்பாலம் கட்ட அனுமதி வழங்கப்பட்டு கடந்த 10 ஆண்டு காலமாக நில எடுப்பு பணிகள் நடைபெறாமல் இந்த திட்டம் நிலுவையில் இருந்து வந்தது. தமிழ்நாடு முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு தமிழகம் முழுவதும் சாலை, மேம்பால பணிகளுக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளை விரைவாக மேற்கொள்ள போதிய நிதியை ஒதுக்கீடு செய்தார்.
அதன் அடிப்படையில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றும் வகையில் கண்ணாடி குப்பம் அய்யனூர் சாலையில் நெடுஞ்சாலை துறை சார்பில் ரூ.25 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் ெரயில்வே மேம்பால கட்டுமான பணிகள் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒப்பந்த காலம் 18 மாதங்கள் என்றாலும் அதற்கு முன்னதாகவே பணிகளை முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு விட ஒப்பந்ததாரருக்கும், நெடுஞ்சாலை துறை அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆய்வுக்கூட்டம்
இந்த பாலம் கட்டுவதனால் வெள்ளக்குட்டை மற்றும் மலைப்பகுதிகளில் விளைவிக்கக்கூடிய விவசாய பொருட்களும் காய்கறிகளும் உரிய நேரத்தில் நகரப்பகுதிக்கு கொண்டு வந்து சந்தைப்படுத்துவதற்கும், வேலைக்கு செல்பவர்களும், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், விவசாயிகள், வியாபாரிகள் என அனைவரும் பயனடைவார்கள்.
நில எடுப்பு பணிகள் முடிந்த பிறகு வாணியம்பாடி நியூடவுன் ெரயில்வே பாலம் கட்டுமான பணிகள் தொடங்கப்படும். ஒரு சில இடங்களில் சாலை விபத்து அடிக்கடி ஏற்படுகிறது. சாலை விபத்துகளை தவிர்ப்பதற்கு சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படுகிறது. அந்த வகையில் திருப்பத்தூரில் பொது நல சங்கத்தினர், கல்வி நிறுவனங்கள், காவல்துறை, நெடுஞ்சாலை, போக்குவரத்துத் துறைகளை ஒன்றிணைத்து ஆய்வுக் கூட்டம் திருப்பத்தூரில் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறி்னார்.
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன், எம்.எல்.ஏ.க்கள் தேவராஜி, வில்வநாதன், நல்லதம்பி, மாதனூர் ஒன்றியக் குழு தலைவர் சுரேஷ்குமார், தலைமை பொறியாளர் சந்திரசேகர், கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல், தாசில்தார் மகாலட்சுமி, ஆம்பூர் நகராட்சி ஆணையாளர் ஷகிலா மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.