போளூரில் ஆமை வேகத்தில் நடைபெறும் ரெயில்வே மேம்பால பணிகள்


போளூரில் ஆமை வேகத்தில் நடைபெறும் ரெயில்வே மேம்பால பணிகள்
x

போளூரில் ஆமை வேகத்தில் நடைபெறும் ரெயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவண்ணாமலை



போளூரில் ஆமை வேகத்தில் நடைபெறும் ரெயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரெயில்வே மேம்பாலம்

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் பஸ் நிலையம் அருகே ரெயில்பாதை செல்கிறது. இங்கு ரெயில்கள் செல்லும்போது ரெயில்வே கேட் மூடப்படும். இதனால் பஸ் நிலையத்துக்கு வரும் பஸ்கள் மற்றும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்கும். மேலும் மாணவ-மாணவிகள் குறித்த நேரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.

இதையடுத்து இந்த பகுதியில் ரெயில்வே ேமம்பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் தற்போது ஏன் ரெயில்வே மேம்பாலம் வேண்டும் என்று கேட்டோம் என்று பொதுமக்கள் நொந்து கொள்ளும்படி 3 ஆண்டுகளுக்கு மேலாக ஆமை வேகத்தில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அந்தப்பகுதி வழியாக செல்லும் பொதுமக்களும், கடை வைத்திருக்கும் வியாபாரிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த ரெயில்வே மேம்பாலம் கட்ட கடந்த 2012-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அப்போது ரெயில்வே பாதையை கடந்து சேத்துப்பட்டு சாலை வழியாக ஒன்றும், வேலூர் பாதை வழியாக ஒன்றும் பிரிவது போல் மேம்பாலம் அமைக்க திட்டமிட்டனர். அந்த நேரத்தில் ெரயில்வே துறை சார்பில் பணி தொடங்க ஆரம்பித்தவுடன், சேத்துப்பட்டு ரோடு பகுதியில் பொதுமக்களின் ஆட்சேபனை காரணமாக பணி நிறுத்தப்பட்டது.

கொரோனா பரவல்

இதையடுத்து மாநில நெடுஞ்சாலைத் துறை திட்டத்தினை மாற்றி சேத்துப்பட்டு சாலையில் பிரியாமல் வேலூர் சாலையில் நேராக செல்வது போல் பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டு 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் பணி தொடங்கப்பட்டது. மேலும் இப்பாலம் கட்டுவதற்கு ரூ.22.66 கோடி நிதி ஒதுக்கப்பட்டு ரூ.17.37 கோடி மதிப்பீட்டில் பணி நடைபெற்று வருகிறது. அப்போது ஆரம்பிக்கப்பட்ட பணி 3½ ஆண்டுகளாக தொடர்ந்து நடக்கிறது.

இந்த பணி காரணமாக போளூர் பஸ் நிலையத்துக்கு பஸ்கள் மற்றும் வாகனங்கள் பைபாஸ் சாலை வழியாக சுற்றி சென்று வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆய்வுக்கு வந்த அப்போதைய கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி மார்ச் 2020-க்குள் பணிகள் முடியும் என நிருபர்களிடம் கூறினார்.

பின்னர் ஏப்ரல் மாதத்தில் இருந்து கொரோனா பரவல் காரணமாக முதல் அலை, இரண்டாம் அலை என ஊரடங்கினால் பணிகள் பாதிக்கப்பட்டது. ஆனால் அதற்குப்பிறகும் கூட பணிகள் விரைவுபடுத்தப்படாமல் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் ஒரே ஒரு திருப்தியான விஷயம் என்னவென்றால் பணி தொடங்கும் போது அடைக்கப்பட்டிருந்த ெரயில்வே கேட்டை அந்த பகுதியில் பணி முடிந்தவுடன் அப்போதைய கலெக்டர் கந்தசாமி திறக்க செய்தார்.

முழு அளவில் பணி முடியும் வரை மூடி வைத்திருந்தால், மக்கள் பெரும் சிரமப்பட்டு இருப்பார்கள். குறிப்பாக போளூர் நகருக்குள் வரும் குண்ணத்தூர், ரெண்டேரிபட்டு, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மக்கள் மட்டுமில்லாதுரெயில்வே கேட்டிற்கு அடுத்துள்ள ஊர்களில் இருந்து வரும் சிரமமாக இருந்திருக்கும்.

80 சதவீத பணிகள்

மாநில நெடுஞ்சாலைத்துறையின் கீழ் நடைபெறும் பணிகள் 80 சதவீதம் முடிவடைந்தாலும் பக்க கால்வாய் பணியும், சர்வீஸ் சாலை பணியும் இன்னும் முடியவில்லை. தற்போது மக்கள் பயன்படுத்த போட்டிருக்கும் சர்வீஸ் சாலை மோசமான நிலையில் உள்ளதால் மழைக்காலங்களில் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.

இன்னும் நில ஆர்ஜித பணிகள் நிலுவையில் உள்ளது. இதுகுறித்து அரசிதழில் இன்னும் வெளிவரவில்லை. அது வந்த பிறகுதான் நிலம் கையெடுப்புக்கு உண்டான தொகை சம்பந்தப்பட்டவர்களுக்கு சென்றடையும். அதன்பின்னர் தான் நிலஎடுப்பு நடைபெறும். பின்னர் பக்க கால்வாய்களும் சர்வீஸ் ரோடு வசதியும் ஏற்படுத்தப்படும். நில ஆர்ஜிதப்பணி முடிப்பதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. இருசக்கர வாகனங்களில் செல்வோர் பாடு வெகு மோசமாக உள்ளது.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரியிடம் கேட்டபோது, ''மின்வாரிய பணி தற்போதுதான் முடிந்துள்ளதாகவும், சாலையை விரிவுபடுத்தும் பணி மேற்கொள்ளப்படும் என்றும் நெடுஞ்சாலை துறைக்கென்று தனியாக மாவட்ட வருவாய் அலுவலர் ஒருவரை நியமித்து இருப்பதால் நிலம் கையகப்படுத்தும் பணிகளும் வேகமாக முடியும் என்றும், இன்னும் 3 மாதத்தில் நெடுஞ்சாலைத்துறை பணிகள் முடியும்'' என்றும் கூறினார்.

இணைக்கும் பணி

பிரதான பணியான ரெயில்வே கேட்டிற்கிடையே இருபுறமும் கட்டி முடிக்கப்பட்ட பாலத்தினை இணைக்கும் பணியை ரெயில்வே துறையினர் மேற்கொள்ள வேண்டும். முதலில் பணியை ஆரம்பித்தவர்கள் ரெயில்வே துறையினர் தான். அப்போது பல்வேறு பிரச்சினைகளுக்காக பணி மேற்கொள்வது தடைபட்டது. அதற்கு பிறகு ெரயில்வே துறை சார்பில் என்ன நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. கடந்த வாரம் ரெயில்வே துறை அதிகாரி இந்த இடத்தை பார்வையிட்டதாகவும், விரைவில் புதிய டெண்டர் விடப்பட்டு பணிகள் மேற்கொள்ள வாய்ப்பிருப்பதாகவும் ஒரு அதிகாரி தெரிவித்தார்.

இதுகுறித்து அரிமா சங்கத்தை சேர்ந்த ஆர்.அன்பரசு கூறியதாவது:-



விரைவில் ரெயில்வே துறை மூலம் மேம்பாலங்களை இணைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். நெடுஞ்சாலைத்துறை, ரெயிவேத்துறை, வருவாய்த்துறை ஆகிய அரசுத்துறையினருக்கு நடைபெறும் பணியில் ஒருங்கிணைப்பு அவசியம். மேம்பாலப்பணி முடியும் வரை கனரக வாகனங்களை இந்தப் பகுதியில் இயக்குவதை தடை செய்ய வேண்டும். சர்வீஸ் சாலைகளை தரமாக செப்பனிட வேண்டும். இனிவரும் மழைக் காலங்களில் மக்களுக்கு அதிகம் பாதிப்பு ஏற்படாத வகையில் இருக்க வேண்டும்.

போளூரைச் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு நுழைவு வாயிலாக இந்த பகுதி உள்ளது. குண்ணத்தூர், ரெண்டேரிப்பட்டு, வீட்டுவசதி வாரியம், பாப்பம்பபாடி வெண்மணி, மாம்பட்டு, அத்திமூர் ஜவ்வாது மலை பகுதியிலிருந்து வருபவர்கள் இந்த வழியாகத்தான் செல்ல வேண்டும். ரெயில்வே மேம்பால பணியினால் தற்போது இருக்கும் சர்வீஸ் ரோட்டில் வாகனத்தில் செல்லவே முடிய வில்லை. மழை பெய்தாலே இப்பகுதி வெள்ளக்காடாகி விடுகிறது. புறவழி சாலையை சுற்றி சென்றால் நேரமும் பயணிக்கும் தூரமும்அதிகமாகிறது. பணியினை விரைவில் முடித்தால் அனைவருக்கும் அனுகூலமாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சுற்றுச்சூழல் பாதிப்பு



இப்பகுதியில் கடை வைத்திருக்கும் அச்சக உரிமையாளர் பி.அற்புதராஜ் கூறுகையில், இந்த பகுதியில் கடை வைத்திருக்கும் வியாபாரிகள் பெரிதும் பாதிப்படைந்து உள்ளனர். இந்த மேம்பால பணி நடைபெறுவதால் இந்த பகுதியில் பயணம் மேற்கொள்பவர்கள் சிறுசிறு விபத்துகளினால் பாதிக்கப்படுகிறார்கள்.

தினசரி கிராமங்களில் இருந்து வியாபார நிமித்தமாக வருபவர்கள், தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க வருபவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். நீண்ட நாட்களாக பணி நடைபெறுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த பணியை துரிதமாக முடித்தால் வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

சின்னப்பையன் என்ற வியாபாரி கூறுகையில், 3 ஆண்டுகளுக்கு மேல் மேம்பாலப் பணி நடைபெற்று வருவதால் யாபாரமும் மந்தமாகி விட்டது. என்னுடைய கடையிலேயே வியாபாரம் 40 சதவீதமாக குறைந்துவிட்டது.



சர்வீஸ் சாலை மண் சாலையாக இருப்பதால் வாகன போக்குவரத்தின் போது புழுதி கிளம்பி இப்பகுதி முழுவதும் நிரம்பி விடுகிறது. இதனால் நோய்த்தொற்றும் ஏற்படுகிறது. மழைக் காலங்களில் இந்த பகுதி முழுவதும் தண்ணீர் தேங்குவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால் வியாபாரிகளுக்கும் நோய்த்தொற்று ஏற்படுகிறது. விரைவில் இந்த பணியை முடித்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.


Next Story