திருப்பரங்குன்றத்தில் இருளில் மூழ்கும் ரெயில்வே மேம்பாலங்கள்
திருப்பரங்குன்றத்தில் தெருவிளக்குகள் எரியாததால் ரெயில்வே மேம்பாலங்கள் இருளில் மூழ்குகிறது.
திருப்பரங்குன்றம்.
திருப்பரங்குன்றத்தில் தெருவிளக்குகள் எரியாததால் ரெயில்வே மேம்பாலங்கள் இருளில் மூழ்குகிறது.
பாலத்தில் பள்ளம்
மதுரைக்கு அடுத்தபடியாக கோவில் நகரமாகவும் வளர்ந்து வரும் சுற்றுலா தளமாகவும் திருப்பரங்குன்றம் திகழ்கிறது. திருப்பரங்குன்றம் நகரின் நுழைவு வாயிலின் இருபுறமும் ரெயில்வே மேம்பாலம் அமைந்துள்ளது. இங்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளும், வெளியூர் பக்தர்களும் ரெயில்வே மேம்பாலங்கள் வழியாக ஊருக்குள் வந்து கோவிலுக்கு சென்று வரமுடியும்.
இந்நிலையில் பாலத்தில் ஆங்காங்கே வெடிப்பும், பள்ளமுமாக உள்ளது. மேலும் பாலத்தின் ஒரு பகுதியில் சர்வீஸ் ரோடு போடாத நிலையும் உள்ளது. மதுரை-திருமங்கலம் செல்லகூடிய அனைத்து நகர அரசு பஸ்கள் மற்றும் இதர வாகனங்கள் பாலத்தின் வழியே சென்று வருவதால் பள்ளத்தை கடந்தும், சர்வீஸ் ரோடு இல்லாததால் குறுகிய சாலையை கடந்தும் செல்வதில் அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் பிற வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இருளில் மூழ்கும் பாலங்கள்
மேலும் மேம்பாலத்தில் உள்ள பெரும்பாலான மின்விளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால் இப்பகுதி இரவு நேரத்தில் இருளில் மூழ்கி கிடக்கிறது. தற்போது நாளுக்கு நாள் அய்யப்ப பக்தர்கள் வருகை அதிகரித்து உள்ளது. எனவே, அய்யப்ப பக்தர்கள் இருளான பாலத்தை கடந்து நகருக்குள் வருவதற்குள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே, மதுரை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து மேம்பாலங்களில் எரியாமல் உள்ள மின்விளக்குகளை எரிய செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சர்வீஸ் ரோடு போடுவதற்கும், பாலத்தில் உள்ள பள்ளங்கள், வெடிப்புகளை சரி செய்ய வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.