நீடாமங்கலத்தில் ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்படுமா?
நீடாமங்கலத்தில் ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
நீடாமங்கலத்தில் ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெருக்கடி
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் ரெயில் நிலையம் அருகில் தேசிய நெடுஞ்சாலையில் ரெயில்வே கேட் அமைந்துள்ளது. இதன் காரணமாக நாள்தோறும் பலமுறை ரெயில்வே கேட் மூடப்பட்டு, நெடுஞ்சாலையில் அடிக்கடி கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வலங்கைமான், கும்பகோணம், திருவாரூர், நாகை, நாகூர், வோளங்கண்ணி உள்ளிட்ட இடங்களுக்கு ஆன்மிக சுற்றுலா மேற்கொள்பவர்களுக்கு நீடாமங்கலம் வழியாக செல்லும் நெடுஞ்சாலை முக்கிய வழித்தடமாகும். நாள்தோறும் பல ஆயிரம்பேர் நீடாமங்கலத்தை கடந்து செல்கிறார்கள். இந்த நிலையில் ரெயில்வே கேட் மூடப்படுவதால் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர் சுற்றுலா பயணிகளும் அவதிப்படுகிறார்கள்.
100 கோடி ரூபாய் ஒதுக்கீடு
ரெயில்வே கேட் மூடப்படுவதால் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக சுற்றுச்சாலை அமைக்க முதலில் திட்டமிடப்பட்டது. இதற்காக மத்திய அரசு தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. பின்னர் நான்கு வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்தபோது அந்த திட்டத்தில் நீடாமங்கலம் பகுதியும் இணைக்கப்பட்டு சுற்றுச்சாலை திட்டம் கைவிடப்பட்டது.
நான்கு வழிச்சாலை திட்டப்பணிகள் தொடங்கி நடந்து வந்தது. திருச்சி முதல் தஞ்சை வரையிலான நான்கு வழிச்சாலை பணிகள் முதலில் நிறைவடைந்தது.
இருவழிச்சாலை திட்டம்
தஞ்சையில் இருந்து நீடாமங்கலம் வழியாக நாகை வரையிலான நான்கு வழிச்சாலை திட்ட பணிகளில் ஏதோ காரணத்தால் தேக்கம் ஏற்பட்டது. அந்த திட்டம் நிதி பற்றாக்குறை காரணமாக இருவழிச்சாலை திட்டமாக அறிவிக்கப்பட்டது. அந்த பணியும் முழுவதுமாக நிறைவேற்றப்படாமல் இருந்தது. தற்போது மீண்டும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
மேம்பாலம் திட்டம்
இதற்கிடையில் மறைந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையான நீடாமங்கலம் ரெயில்வே மேம்பாலம் திட்டத்திற்காக முதல் கட்டமாக 20 கோடி ரூபாயை அரசின் 110-வது விதியின் கீழ் அறிவித்தார். அதன்படி மண்பரிசோதனை செய்யப்பட்டு, நெடுஞ்சாலைத்துறையால் திட்ட வரைபடங்கள் தயாரிக்கப்பட்டன. ரெயில்வே துறை, நெடுஞ்சாலைத்துறையால் ஆய்வும் நடத்தப்பட்டது.
தொடர்ந்து நீடாமங்கலம் ரெயில்வே மேம்பாலம் திட்டத்திற்காக 2015-2016-ம் நிதி ஆண்டில் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து அனுமதி அளித்துள்ளது. இதில் ரூ.53 கோடியே 92 லட்சத்தை ரெயில்வே துறை தன்பங்கிற்கு செலவிட திட்டமிட்டுள்ளது. ஆனால் திட்ட பணிகள் தொடங்காத காரணத்தால் ரெயில்வே துறை தனது பங்கிற்கான 53 கோடி ரூபாயை விடுவிக்காமல் உள்ளது. இதில் தேய்மான நிதியாக 44 கோடியே 95 லட்சம் ரூபாயும், மூலதன நிதியாக 8 கோடியே 97 லட்ச ரூபாயும் செலவிட திட்டமிடப்பட்டது.
மக்கள் நம்பிக்கை
இதேபோல் ஒவ்வொரு ஆண்டும் சிறு, சிறு தொகையாக ஒதுக்கீடு செய்துள்ள நிதியும் உள்ளது. ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணி தொடங்கும் பட்சத்தில் இந்த தொகையை ரெயில்வே துறை வழங்கும் என தெரிகிறது.
கிடப்பில் போடப்பட்ட நீடாமங்கலம் ரெயில்வே மேம்பாலம் திட்ட பணி மீண்டும் தொடங்கப்படும் என தமிழக அரசு தரப்பிலும் தொடர்ந்து உறுதி அளிக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு ஆரம்ப கட்டமாக நிதியும் ஒதுக்கி உள்ளது. இதன் மூலம் நீடாமங்கலத்தில் மேம்பாலம் அமையும் என மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட அடிப்படை பணிகளை அதிகாரிகள் செய்து வருவதாக கூறப்படுகிறது.
நீடாமங்கலத்தில் ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
தினசரி சரக்கு ரெயில், பயணிகள் ரெயில், என்ஜின்கள் இயக்கப்படும்போதெல்லாம் நீடாமங்கலத்தில் ரெயில்வே கேட் மூடப்படுகிறது. இதனால் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியில் உள்ளூர் மக்கள் சிக்கி தவிக்கின்ற நிலை உள்ளது. இந்த நிலையில் ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்படாதது பொதுமக்களிடத்தில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
எனவே நீடாமங்கலம் மேம்பாலம் கட்டுமான பணிகளை விரைந்து தொடங்கி, விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.