திருச்சியில் தண்டவாள மறுசீரமைப்புப்பணி:விழுப்புரத்துக்கு வந்த தென்மாவட்ட ரெயில்கள் 5 மணிநேரம் தாமதம்பயணிகள் கடும் அவதி


திருச்சியில் தண்டவாள மறுசீரமைப்புப்பணி:விழுப்புரத்துக்கு வந்த தென்மாவட்ட ரெயில்கள் 5 மணிநேரம் தாமதம்பயணிகள் கடும் அவதி
x
தினத்தந்தி 1 Aug 2023 12:15 AM IST (Updated: 1 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் தண்டவாளம் மறுசீரமைப்புப்பணிகள் நடைபெற்று வருவதால் தென்மாவட்ட ரெயில்கள் 5 மணிநேரம் தாமதமாக சென்னை வந்தடைந்தன. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

விழுப்புரம்


சென்னை எழும்பூரில் இருந்து தென்மாவட்டங்களுக்கு 10-க்கும் மேற்பட்ட ரெயில்கள் தினந்தோறும் இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோல, தென் மாவட்டத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கும் இயக்கப்பட்டு வருகிறது. இதில் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் தினமும் பயணித்து வருகின்றனர். அதிலும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரெயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் நிற்கக்கூட முடியாத அளவுக்கு பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும்.

இதற்கிடையே, திருச்சி ரெயில்நிலையத்தில் தண்டவாள மறுசீரமைப்பு பணி கடந்த 20-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதனால் திருச்சியிலிருந்து இயக்கப்படும் சில ரெயில்கள் பகுதியாகவும், முழுமையாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் சில ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டும் வருகின்றன.

இந்தநிலையில், திருச்சியை ஒட்டிய பொன்மலை ரெயில்நிலையத்திலும், மதுரைக்கு செல்லக்கூடிய பிரிவு பாதையிலும் நேற்றுமுன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) சில முக்கியமான பணிகள் நடைபெற்றது. அப்போது அந்த வழியாக சென்னைக்கு வந்து கொண்டிருந்த அனைத்து ரெயில்களும் பல மணிநேரமாக வழியில் நிறுத்தி வைக்கப்பட்டன. பாதை சீரமைக்கும் வரை ரெயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் பயணிகள் இரவில் தூக்கமின்றி மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர். அதிகாலை 4 மணிக்கு மேல் ஒவ்வொரு ரெயிலாக புறப்பட்டுச்சென்றது.

தாமதமாக வந்த ரெயில்கள்

இதனால் விழுப்புரம் ரெயில் நிலையத்திற்கு நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு வர வேண்டிய கொல்லம்- சென்னை செல்லும் கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று அதிகாலை 5 மணிக்கும், நள்ளிரவு 1 மணிக்கு வர வேண்டிய திருச்சி- சென்னை செல்லும் ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் அதிகாலை 5.30 மணிக்கும், நள்ளிரவு 1.30 மணிக்கு வர வேண்டிய மங்களூர்- சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 6 மணிக்கும் வந்தது.

அதேபோன்று, பாண்டியன், பொதிகை, நெல்லை, அந்த்யோதயா, கன்னியாகுமரி, ராமேஸ்வரம்- சென்னை எக்ஸ்பிரஸ், சேது, முத்துநகர், அனந்தபுரி, திருச்செந்தூர், மங்களூர்- சென்னை வாராந்திர எக்ஸ்பிரஸ், பல்லவன், வைகை ஆகிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் விழுப்புரத்துக்கு வழக்கமாக வரும் நேரங்களில் இருந்து 4 மணி முதல் 5 மணி நேரம் வரையில் தாமதமாக வெவ்வேறு நேரங்களில் வந்து சேர்ந்தது. பின்னர் அங்கிருந்து ஒவ்வொன்றாக சென்னைக்கு புறப்பட்டு சென்றன.

பயணிகள் ரெயில் ரத்து

இதேபோல் சென்னையில் இருந்து திருச்சி செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில், சென்னையில் இருந்து தாமதமாக புறப்பட்டது. இதன் காரணமாக விழுப்புரம் ரெயில் நிலையத்திற்கு காலை 9.45 மணிக்கு வர வேண்டிய அந்த ரெயில் மதியம் 1.30 மணிக்கு வந்தது.

மேலும் மதுரையில் இருந்து விழுப்புரம் வரும் பயணிகள் ரெயிலும், விழுப்புரத்தில் இருந்து மதுரை புறப்படும் பயணிகள் ரெயிலும் நேற்று இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டன. தண்டவாள சீரமைப்பு பணியினால் ரெயில்கள் மிகவும் காலதாமதமாக வந்ததால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

பயணிகள் அவதி

இதனால் விடுமுறை நாளில் சொந்த ஊர் உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்றுவிட்டு நேற்று மீண்டும் பணிக்கு திரும்புவதற்காக ரெயிலில் வந்தவர்கள் பணிக்கு செல்லமுடியாமல் தவித்தனர். மேலும் ரெயிலில் பயணித்த குழந்தைகள், வயதானோர் என அனைவரும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினார்கள். மேலும் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை அழைத்து செல்வதற்காக சென்னை எழும்பூர் ரெயில்நிலையத்துக்கு வந்திருந்தவர்களும், பல மணிநேரம் காத்துக்கிடக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.


Next Story