ஞாயிற்றுக்கிழமையும் பயணச்சீட்டு முன்பதிவு மையம் இயங்கும்
பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையும் பயணச்சீட்டு முன்பதிவு மையம் இயங்கும் என்று ரெயில்வே அறிவித்துள்ளது.
பட்டுக்கோட்டை;
பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையும் பயணச்சீட்டு முன்பதிவு மையம் இயங்கும் என்று ரெயில்வே அறிவித்துள்ளது.
ரெயில்வே முன்பதிவு மையம்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்தில் பயணச்சீட்டு முன்பதிவு மையம் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 8 மணிமுதல் மதியம் 2 மணி வரை இயங்கியது. ஞாயிற்றுக்கிழமைகளில் பயணச்சீட்டு முன்பதிவு மையம் இயங்கவில்லை.இதனால் ஞாயிற்றுக்கிழமைகளில் பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி மக்கள் பயணச்சீட்டு முன்பதிவு, தட்கல் முன்பதிவு, பயண சீட்டு முன்பதிவை ரத்து செய்தல் போன்ற தேவைகளை நிவர்த்தி செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். இதனால் இந்த பகுதி மக்கள் வெளியூர்களில் ஞாயிற்றுக்கிழமையும் முன்பதிவு மையங்கள் இயங்கும் ரெயில் நிலையங்களுக்கு சென்று வந்தனர்.
உத்தரவு
இந்தநிலையில் திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் மணிஷ் அகர்வால் பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்துக்கு ஆய்வுக்கு வந்தபோது பட்டுக்கோட்டை வட்ட ரெயில் பயணிகள் நலச்சங்க தலைவர் ஜெயராமன் மற்றும் உறுப்பினர்கள் பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையும் முன்பதிவு மையம் இயங்கவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.இதை ஏற்றுக்கொண்ட திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிமுதல் மதியம் 2 மணிவரை பயணச் சீட்டு முன்பதிவு மையம் இயங்க உத்தரவு பிறப்பித்துள்ளா். இதைத்தொடர்ந்து திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் மற்றும் முதுநிலை கோட்ட வர்த்தக மேலாளர் ஆகியோருக்கு பட்டுக்கோட்டை வட்ட ரெயில் பயணிகள் நலச்சங்கத்தினர் நன்றி தெரிவித்தனர்.