பாலக்கோடு ரெயில் நிலையத்தில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் நின்று செல்லுமா? பயணிகள் எதிர்பார்ப்பு
பாலக்கோடு ரெயில் நிலையத்தில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் நின்று செல்லுமா? பயணிகள் எதிர்பார்ப்பு
பாலக்கோடு:
பாலக்கோடு ரெயில் நிலையத்தில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் நின்று செல்லுமா? என பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.
ஆயிரக்கணக்கான பயணிகள்
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்களில் ஒன்றாக பாலக்கோடு உள்ளது. பாலக்கோடு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் ஒரு லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மிக முக்கிய போக்குவரத்து மையமாக பாலக்கோடு ரெயில் நிலையம் அமைந்துள்ளது. சேலம்- தர்மபுரி- பெங்களூரு வழித்தடத்தில் செல்லும் ரெயில்கள் பாலக்கோடு ரெயில் நிலையம் வழியாக சென்று வருகின்றன. இந்த வழித்தடத்தில் செல்லும் பயணிகள் ரெயில்கள் மூலமாக பாலக்கோடு ரெயில் நிலையத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் ஓசூருக்கும், பெங்களூரு மற்றும் மைசூருவுக்கும் பல்வேறு பணிகளுக்காக சென்று வருகிறார்கள்.
இதேபோல் தர்மபுரி, சேலம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கும் இங்கிருந்து பயணிகள் ரெயில்கள் மூலம் சென்று வருகின்றனர். குறிப்பாக வியாபாரம், வேலை தொடர்பாக பெங்களூருவுக்கு அதிகமாக சென்று வரும் பென்னாகரம், பாலக்கோடு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு பாலக்கோடு ரெயில் நிலையம் மிக பயனுள்ள சேவையை அளிக்கிறது.
கால தாமதம்
பாலக்கோடு வழியாக வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு 11 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சென்று வருகின்றன. இவற்றில் 3 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மட்டுமே பாலக்கோட்டில் நின்று செல்கின்றன. மற்ற எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இங்கு நிற்பதில்லை. இதனால் பாலக்கோடு, காரிமங்கலம், பென்னாகரம், பாப்பாரப்பட்டி, மாரண்டஅள்ளி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பாலக்கோடு வழியாக செல்லும் பெரும்பாலான எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பயணிக்க முடியாத நிலை தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.
அவ்வாறு பயணிக்க வேண்டும் என்றால் தர்மபுரி ரெயில் நிலையத்திற்கு சென்று அங்கிருந்து எக்ஸ்பிரஸ் ரெயில்களை பிடித்து பல்வேறு ஊர்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் கூடுதல் பண செலவு மற்றும் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் பல்வேறு பணிகளுக்கு ஓசூர், பெங்களூரு, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வோர் ரெயில் பயணத்திற்கு பதிலாக மாற்று போக்குவரத்தை பயன்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு தீர்வு காண பாலக்கோடு ரெயில் நிலையத்தில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் நின்று செல்ல ரெயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக இந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கடும் பாதிப்பு
பாலக்கோட்டை சேர்ந்தகமலேஷ்:- பாலக்கோடு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பலர் வேலை, தொழில், அலுவலகம், வியாபாரம் மற்றும் மருத்துவ சிகிச்சை என பல்வேறு தேவைகளுக்காக ஓசூர், பெங்களூரு தர்மபுரி, சேலம் பகுதிகளுக்கு சென்று வருகிறார்கள். குறிப்பாக திருவிழா, பண்டிகை காலங்களில் ஆயிரக்கணக்கானோர் பாலக்கோடு ரெயில் நிலையம் வழியாக பல்வேறு ஊர்களுக்கு வந்து செல்கிறார்கள். இங்கு பெரும்பாலான எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நிற்காததால் இந்த பகுதி மக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படுகிறது. சில மணி நேரங்களில் செல்ல வேண்டிய ஊர்களுக்கு பல மணி நேரம் காலதாமதமாக செல்லும் சூழல் ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி பாலக்கோடு ரெயில் நிலையத்தில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொழில் வளர்ச்சி
பாலக்கோட்டை சேர்ந்த வியாபாரி கார்த்திக்:- பாலக்கோடு ரெயில் நிலையத்திலிருந்து தினசரி வேலைக்கு செல்பவர்கள், வணிகர்கள், மாணவர்கள், தொழில்முனைவோர் என நூற்றுக்கணக்கானோர் பல்வேறு பணிகளுக்காக ஓசூர், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கிறார்கள். இதேபோல் ஏராளமான பயணிகள் பாலக்கோடு ரெயில் நிலையத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கும் வெளி மாநிலங்களுக்கும் சொல்கிறார்கள். இவர்கள் இங்கிருந்து செல்ல வேண்டிய பகுதிகளுக்கு விரைவாகவும், எளிதாகவும் சென்று வர அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களையும் பாலக்கோடு ரெயில் நிலையத்தில் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் இந்த பகுதியில் தொழில் வளர்ச்சி தொடர்புகள் அதிகரிக்கும். இந்த மாவட்டத்தின் மக்கள் விரைவான வளர்ச்சியை பெற உதவும். மாவட்ட வளர்ச்சிக்கு உதவும்.
இவ்வாறு அவர்கள்தெரிவித்தனர்.