வீரகனூர் பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை: மரங்கள் விழுந்து மின் கம்பங்கள் சேதம்
வீரகனூர் பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த மழையால், மரங்கள் விழுந்து மின் கம்பங்கள் சேதம் அடைந்தன.
தலைவாசல்:
தலைவாசல் அருகே உள்ள வீரகனூர் பகுதியில் நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக சந்தைப்பேட்டை பகுதியில் இருந்த புளியமரத்தின் கிளைகள் முறிந்து விழுந்தன. மேலும் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து மின் கம்பங்கள் மீது விழுந்ததால் மின் தடை ஏற்பட்டது. ஓரிரு இடங்களில் வீட்டில் மேற்கூரைகள் காற்றில் பறந்தன. சுமார் 1 மணி நேரத்துக்கு மேல் நீடித்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடின. தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள் மரக்கிளைகளை அகற்றியும், மின் கம்பங்களை சரி செய்தும் மின் வினியோகத்தை சீரமைத்தனர்.
இந்த நிலையில் அக்னி நட்சத்திர நிறைவு நாளான நேற்று தலைவாசல் பகுதியில் கடும் வெயில் சுட்டெரித்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் குளிர்பானங்கள், நீர்மோர், இளநீர் விற்பனை சூடு பிடித்தது. தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட், வீரகனூர்-மும்முடி மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் மக்கள்நடமாட்டம் குறைவாக இருந்தது.