திருப்புவனம் பகுதியில் இடி, மின்னலுடன் கனமழை
திருப்புவனம்,
திருப்புவனம் பகுதியில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. 140 மி.மீ. மழை பதிவானது.
கனமழை
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் கடந்த சில தினங்களாக பகல் நேரத்தில் வெயில் அடித்தும், மாலை நேரங்களில் தொடர்ந்து மழை பெய்தும் வருகிறது. பகலில் வழக்கம் போல வெயில் வாட்டி வதைத்தது. பின்பு மாலை நேரத்தில் மேகமூட்டங்கள் சூழ்ந்்து காணப்பட்டது.
இதைத் தொடர்ந்து லேசான சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. நேரம் செல்ல செல்ல மழையின் வேகம் அதிகரித்தது.
பின்னர் இரவு சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்த வண்ணம் இருந்தது. மேலும் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
140 மி.மீ.
கிராம பகுதியில் உள்ள சாலைகள் மற்றும் வயல்வெளி பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. மேலும் பள்ளமான பகுதிகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சியளித்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
இந்த கன மழையால் திருப்புவனம் பகுதிகளில் உள்ள குடிநீர் கிணறுகளில் நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது. மேலும் நிலத்தடி நீர்மட்டமும் கணிசமாக உயரும் நிலை உள்ளது. நேற்று முன்தினம் இரவு பெய்த மழை காரணமாக வெப்ப தாக்கம் குறைந்து குளுமையான சூழ்நிலை நிலவியது. மழை பெய்து கொண்டிருக்கும் போதே அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மற்றும் முதியவர்கள் பெரிதும் அவதிப்பட்டனர். மொத்தம் 140.04 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
காரைக்குடி
இதே போல காரைக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் கனமழை பெய்தது. மாலையில் மழை பெய்தது. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இதனால் இரவில் வெப்பம் தணிந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை காணப்பட்டது.
சிங்கம்புணரி பகுதியிலும் இரவில் மழை பெய்தது. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டி தீர்த்தது. அதே போல மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று கனமழை பெய்தது. தினமும் மாலை நேரத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.