மத்தூரில் கனமழை: சாலையில் வெள்ளம் பாய்ந்தோடியது-போக்குவரத்து நிறுத்தம்
மத்தூர்:
மத்தூர் அருகே கண்ணண்டஅள்ளி கூட்டு ரோடு பகுதி உள்ளது. இந்த வழியாக பெங்களூரு-புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதில் புதிய தார்சாலை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இதனால் சாலையோரங்களில் ஜல்லி கற்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் மத்தூர் பகுதியில் நேற்று முன்தினம் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் வி.ஐ.பி. நகரில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. மேலும் கண்ணண்டஅள்ளி கூட்டு ரோடு பகுதி தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் காட்டாற்று வெள்ளம் போல பாய்ந்தோடியது. இதனால் சாலையில் அரிப்பு ஏற்பட்டது. மேலும் சாலை அமைக்கும் பணிக்காக குவித்து வைக்கப்பட்டிருந்த ஜல்லி கற்கள் மற்றும் பிற பொருட்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இதனால் அரை மணி நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து தண்ணீர் வடிந்த பிறகு சாலையில் வாகன போக்குவரத்து தொடங்கியது.