குமாரபாளையத்தை புரட்டிபோட்ட கனமழை பள்ளிக்கூடம், குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது
குமாரபாளையத்தை புரட்டிபோட்ட கனமழையால் பள்ளிக்கூடம், குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
குமாரபாளையம்:
குமாரபாளையத்தை புரட்டிபோட்ட கனமழையால் பள்ளிக்கூடம், குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
ஏரிகள் நிரம்பின
நாமக்கல் மாவட்டம் குமா ர பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதுடன் அங்குள்ள ஏரி, குளங்கள் நிரம்பி வருகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய கனமழை நேரம் செல்ல செல்ல வெளுத்து வாங்கியது.
இந்த மழைக்கு குமாரபாளையம் அருகே கத்தேரி, ஓலப்பாளையம் ஏரிகள் நிரம்பியதுடன் மறுகால் பாய்ந்து ஓடையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக ஓலப்பாளையம் எம்.ஜி.ஆர். நகர், கம்பன் நகர், பாரதி வீதி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காந்திபுரம் வடக்கு, ராஜாஜி குப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள 100-க் கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
பொதுமக்கள் அவதி
கத்தேரி ஏரி நிரம்பியதால் பெரும்பள்ளம் வழியாக மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் பெரும்பள்ளத்தில் செடி, கொடிகள் நிரம்பி இருந்ததால் மழைநீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. அந்த பகுதியில் உள்ள சாயப்பட்டறைகளில் இருந்து பேரல்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் மழைநீரில் அடித்து செல்லப்பட்டு ஆனங்கூர் ரோடு வழியில் உள்ள தரைப்பால பகுதியில் சிக்கி அடைத்து கொண்டன.
இதற்கிடையே குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர். அவர்கள் வாளி, பாத்திரங்களில் தண்ணீரை எடுத்து அப்புறப்படுத்தினர். குமாரபாளையத்தில் தி.மு.க. அலுவலகம் முன்புள்ள தரைப்பாலம் சேதம் அடைந்தது. இதுதவிர சேலம் மெயின் ரோட்டின் வழியே சுமார் 3 அடி உயரத்திற்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நேற்று காலை குமாரபாளையத்தில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் உணவு சமைக்க முடியாமல் அவதியடைந்தனர். அவர்களுக்கு தி.மு.க., அ.தி.மு.க.வினர் உணவு வழங்கினர்.
பள்ளிகளுக்கு விடுமுறை
குமாரபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பாரதியார் வீதி நகராட்சி தொடக்கப்பள்ளி, தர்மதோப்பு வாசுகி நகர் அரசு நடுநிலைப்பள்ளிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த பள்ளிக்கூடங்களில் நகராட்சி நிர்வாகம், வருவாய் துறையினர் இணைந்து மழைநீர் வடிய நடவடிக்கை எடுத்தனர். குமாரபாளையத்தில் வெள்ள பாதிப்புகள் குறித்து அறிந்த தாசில்தார் தமிழரசி, கிராம நிர்வாக அலுவலர்கள் அங்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவினர்.
மேலும் ஓலப்பாளையம் ஏரியில் மீன் வளர்ப்பதற்காக மதகுகள் அடைக்கப்பட்டு இருந்ததால் தண்ணீர் வெளியேற முடியாமல் பக்கவாட்டில் உள்ள நீர்வழி பாதை வழியாக வெளியேறியதால் தான் இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. குமாரபாளையத்தை புரட்டிபோட்ட இந்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
நீர்வழி பாதை ஆக்கிரமிப்பு
குமாரபாளையத்தில் நீர்வழி பாதைகளை ஆக்கிரமிப்பு செய்து கட்டிடம் கட்டியதன் விளைவாகவே மழைநீர் செல்ல வழியின்றி வீடுகளுக்குள் புகுந்ததாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். எனவே நீர்வழி ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.