ஈரோட்டில் விடிய விடிய கொட்டித்தீர்த்த மழை: 50 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது; பொதுமக்கள் அவதி- அம்மாபேட்டையில் அதிகபட்சமாக 92 மி.மீட்டர் மழை பதிவானது
ஈரோட்டில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் 50 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. அம்மாபேட்டையில் அதிகபட்சமாக 92 மி.மீட்டர் மழைப்பதிவாகி இருந்தது.
ஈரோடு
ஈரோட்டில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் 50 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. அம்மாபேட்டையில் அதிகபட்சமாக 92 மி.மீட்டர் மழைப்பதிவாகி இருந்தது.
வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பகலில் ஈரோட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இரவில் திடீரென இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. விடிய விடிய மழை கொட்டித்தீர்த்ததால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. மாநகராட்சி 19-வது வார்டுக்கு உள்பட்ட வெட்டுக்காட்டுவலசு மடிகாரர்காலனியில் உள்ள 3 வீதிகளில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. சுமார் 25 வீடுகளில் மழைநீர் புகுந்ததால், பொதுமக்கள் பெரும் அவதி அடைந்தனர். அங்கு சாக்கடை வசதி இல்லாததால் வீடுகளில் தண்ணீர் புகுந்தது. எனவே மழைநீர் தேங்காமல் இருக்கும் வகையில், சாக்கடை வடிகால் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ஈரோடு பிச்சைக்காரன்பள்ளம் ஓடையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பி.பி.அக்ரஹாரம் பகுதியில் செல்லும் தரைப்பாலம் மூழ்கியதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். மேலும் ஈரோடு அன்னை சத்யாநகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளையும் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் தரைதளத்தில் உள்ள 25-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது.
92 மி.மீட்டர்
நாடார்மேடு அண்ணமார் பெட்ரோல் பங்க் பகுதியிலும் கழிவுநீர் மழைநீருடன் சேர்ந்து பெருக்கெடுத்து ஓடியது. சாலை முழுவதும் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்கள் நடந்து செல்வதற்கே சிரமப்பட்டார்கள். சாக்கடை வடிகால் குறுகியதாக இருப்பதால் கழிவுநீர் செல்ல முடியாமல் ரோட்டுக்கு வருகிறது. பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் வடிகாலை விரிவுபடுத்தும் பணி தொடங்கப்படாமல் இருப்பதால், அங்கு கழிவுநீர் வெளியேறுவது தொடர்கதையாகி வருகிறது. பகல் 11 மணி வரை கழிவுநீர் குளம்போல் தேங்கி நின்றது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
அம்மாபேட்டை - 92, பெருந்துறை- 40, கோபி- 40, பவானிசாகர் - 30, பவானி - 29.4, மொடக்குறிச்சி - 29, கொடுமுடி - 25 தாளவாடி- 24, கொடிவேரி - 23.2, கவுந்தப்பாடி - 19.6, ஈரோடு - 14, குண்டேரிபள்ளம் - 12.2, சத்தியமங்கலம் - 12, வரட்டுப்பள்ளம் - 11, சென்னிமலை - 10.