கண்மாய்கள் நிரம்பியது


கண்மாய்கள் நிரம்பியது
x
தினத்தந்தி 22 Oct 2022 12:15 AM IST (Updated: 22 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் வடகிழக்கு பருவ மழை காரணமாக பல்வேறு இடங்களில் உள்ள கண்மாய்கள் நிரம்பி மறுகால் செல்கிறது.

சிவகங்கை

காரைக்குடி,

சிவகங்கை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் வடகிழக்கு பருவ மழை காரணமாக பல்வேறு இடங்களில் உள்ள கண்மாய்கள் நிரம்பி மறுகால் செல்கிறது.

நிரம்பி வழியும் கண்மாய்கள்

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. காரைக்குடி, சிவகங்கை, திருப்புவனம், திருப்பத்தூர், சிங்கம்புணரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து இரவு, பகலாக பலத்த மழை பெய்து வருகிறது.

தற்சமயம் தீபாவளி பண்டிகை தினமாக இருப்பதால் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக ஜவுளி, பட்டாசு, மளிகை பொருட்கள் உள்ளிட்ட பொருட்களின் விற்பனையில் சற்று சரிவு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் மறுபுறம் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து வருகின்றனர். தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கணக்கான ஊருணிகள், குளங்கள், கண்மாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வழிகிறது.

விவசாய பணி தீவிரம்

இதுதவிர மாவட்டத்தில் உள்ள பெரியகண்மாய்கள் நிரம்பி வருகிறது. திருப்புவனம் அருகே பூவந்தி கண்மாய், திருப்பத்தூர் அருகே ஏரியூர் கண்மாய், காரைக்குடி செஞ்சை நாட்டார் கண்மாய், கோவிலூர் கண்மாய் உள்ளிட்ட ஏராளமான கண்மாய்கள் தற்போது நிரம்பி வருகிறது. காரைக்குடி அருகே கோவிலூர் பகுதியில் உள்ள கண்மாய் நிரம்பி அந்த வழியாக உள்ள ஓடையில் சென்று அருவியில் ஆர்ப்பரித்து செல்வது போன்று தண்ணீர் செல்கிறது. காரைக்குடி செஞ்சையில் உள்ள நாட்டார் கண்மாய், குடிக்காத்தான் கண்மாய், அரியக்குடி கண்மாய் உள்ளிட்ட கண்மாய்கள் நிரம்பி மணிமுத்தாறு வழியாக கடலுக்கு செல்கிறது.

மழை அளவு

செஞ்சை நாட்டார் கண்மாய் சீரமைப்பு பணிகள் சரிவர நடைபெறாததால் அங்கு அதலை செடிகள் மற்றும் கருவேல மரங்கள் மண்டி கிடப்பதால் தற்போது கண்மாய் நிரம்பி வெளியேறும் தண்ணீர் வெள்ளை நுரையுடன் துர்நாற்றம் வீசும் வகையில் வெளியேறி வருகிறது. இதேபோல் காரைக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் பெய்து வரும் மழையை பயன்படுத்தி விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் விவசாய பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மாவட்டத்தில் நேற்று காலை வரை பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- சிவகங்கை 11.04, மானாமதுரை 3, இளையான்குடி 40, திருப்புவனம் 76.4, தேவகோட்டை 29.4, காரைக்குடி 15, திருப்பத்தூர் 25, சிங்கம்புணரி 83.6, காளையார்கோவில் 9.02 ஆகும். இதில் அதிகபட்சமாக சிங்கம்புணரியில் 83.6 மில்லி மீட்டரும், குறைந்த பட்சமாக மானாமதுரையில் 3 மில்லி மீட்டரும் மழை பாதிவாகியுள்ளது.


Next Story