டி.என்.பாளையம் பகுதியில் கனமழை: 70 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது- பாதிக்கப்பட்டவர்கள் சமுதாய கூடத்தில் தங்கவைப்பு


டி.என்.பாளையம் பகுதியில் பெய்த கனமழையால் 70 வீடுகளை வெள்ளம் சூழந்தது. பாதிக்கப்பட்டவர்கள் சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

ஈரோடு

டி.என்.பாளையம் பகுதியில் பெய்த கனமழையால் 70 வீடுகளை வெள்ளம் சூழந்தது. பாதிக்கப்பட்டவர்கள் சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

அதிகாலையில் கனமழை

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை பலத்த மழை பெய்தது. அதனால் அங்குள்ள ஒரு தரைப்பாலம் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலும் மழைவெள்ளம் நெல் வயல்களுக்குள் புகுந்து குளம்போல் நின்றது.

இந்தநிலையில் 2-வது நாளாக நேற்று அதிகாலையும் டி.என்.பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் மழை கொட்டி தீர்த்தது.

டி.என்.பாளையத்தை அடுத்த கொங்கர்பாளையம் ஊராட்சியில் கவுண்டம்பாளைம் கொன்னக்கொடிகால் என்ற கிராமம் உள்ளது. இங்கு சுமார் 70 வீடுகளில் 300-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

தண்ணீர் சூழ்ந்தது

திடீரென கொட்டிய மழையால் கொன்னக்கொடிகால் பகுதியில் உள்ள 70 வீடுகளையும் தண்ணீர் சூழ்ந்தது. 20 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் செய்வதறியாது தவித்த பொதுமக்கள் தரையில் உள்ள பொருட்களை வீட்டின் மேல் உள்ள இடங்களில் வைத்துவிட்டு வெளியேறினார்கள்.

ஒவ்வொரு வீட்டையும் முட்டளவு தண்ணீர் சூழ்ந்து இருந்தது. அதனால் தண்ணீரில் தட்டுத்தடுமாறி இறங்கி வெளிேய வந்தார்கள்.

மேலும் தங்களின் நிலை குறித்து டி.என்.பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி தலைவர் ஆகியோருக்கு செல்போனில் தகவல் தெரிவித்தனர். பின்னர் சத்தியமங்கலம்-அத்தாணி சாலையில் ஒன்று திரண்டார்கள்.

தங்கவைப்பு

இதுபற்றயி தகவல் அறிந்ததும் வருவாய்த்துறை அதிகாரிகளும், பங்களாப்புதூர் போலீசாரும் அங்கு வந்தார்கள். அப்போது அதிகாரிகளிடம் பாதிக்கப்பட்ட மக்கள், 'திடீரென வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விட்டது. தண்ணீரோடு பாம்புகளும் படையெடுக்கின்றன. எப்படி வீட்டுக்குள் இருப்பது?, எங்கள் பகுதியில் முறையான வடிகால் வசதி இல்லை. ஒவ்வொரு முறை மழை பெய்யும்போது அவதிப்படுகிறோம். உடனே வீடுகளை சூழ்ந்த தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று முறையிட்டார்கள்.

அதற்கு போலீசாரும், அதிகாரிகளும் இதுபற்றி உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து ஆவன செய்கிறோம் என்று சமாதானப்படுத்தினார்கள். பின்னர் அனைவரையும் வேனில் ஏற்றி வாணிப்புத்தூர் சமுதாயக்கூடத்துக்கு அனுப்பி வைத்தார்கள்.

சாரல் மழை

இதேபோல் ஆசனூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக மிதமான சாரல் மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று காலை 6 மணி முதல் 8 மணி வரை திம்பம், காளிதிம்பம், குளியாடா, பெஜலட்டி மற்றும் வனப்பகுதியில் மிதமான மழை பெய்தது. கோபி, நம்பியூர் பகுதியிலும் நேற்று காலை சாரல் மழை பெய்தது.

ஈரோட்டிலும் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது. இதனால் ஈரோடு காய்கறி மார்க்கெட்டில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக காணப்பட்டது. இதனால் வியாபாரிகளும், காய்கறிகள் வாங்க வந்த பொதுமக்களும் சிரமம் அடைந்தார்கள்.

மழை அளவு (மில்லி மீட்டர்)

கோபிசெட்டிபாளையம் - 49.2

அம்மாபேட்டை - 41.4

குண்டேரிப்பள்ளம் - 31.4

கொடிவேரி - 22

வரட்டுப்பள்ளம் - 14.1

கவுந்தப்பாடி - 14

பவானிசாகர் - 11.6

ஈரோடு - 9

சத்தியமங்கலம் - 6

பெருந்துறை - 3


Related Tags :
Next Story