நாகை மாவட்ட பகுதிகளில் சாரல் மழை


நாகை மாவட்ட பகுதிகளில் சாரல் மழை
x
தினத்தந்தி 9 Dec 2022 12:15 AM IST (Updated: 9 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மாண்டஸ் புயல் கரையை நெருங்கி வரும் நிலையில் நாகை மாவட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

நாகப்பட்டினம்

மாண்டஸ் புயல் கரையை நெருங்கி வரும் நிலையில் நாகை மாவட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

சாரல் மழை

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து மாண்டஸ் புயலாக மாறி உள்ளது. இந்த புயல் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று நாகை மாவட்டம் வேதாரண்யம், அகஸ்தியன்பள்ளி, கோடியக்கரை, தோப்புத்துறை, செம்போடை, கரியாப்பட்டினம், ஆயக்காரன்புலம், கருப்பம்புலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது.

இந்த மழை மதியம் 12 மணி முதல் தொடர்ந்து பல மணிநேரம் நீடித்தது. இதனிடையே மாண்டஸ் புயலை எதிர் கொள்ளும் வகையில் வருவாய்த்துறையினர் தாழ்வான பகுதியில் உள்ள மக்களை தங்க வைக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

கடல் சிற்றம்

வேதாரண்யம் பகுதியில் 61 ஊராட்சிகளிலும் புயல் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக தாசில்தார் ஜெயசீலன் தெரிவித்தார். மேலும் மீட்பு பணியில் ஈடுபட தீயணைப்பு துறையினரும் தயார் நிலையில் உள்ளனர். கடல் சீற்றமாக காணப்படுவதால் வேதாரண்யம் அருகே உள்ள ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், மணியன்தீவு, கோடியக்கரை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

நாகூர்-திட்டச்சேரி

நாகூரில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் மதியம் சாரல் மழை பெய்ய தொடங்கியது. அப்போது காற்றின் தாக்கமும் இருந்தது. நாகூரில் கடல் சீற்றமாக காணப்பட்டது. திருமருகல் ஒன்றியத்தில் பல்வேறு பகுதியில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. நேற்று காலை முதல் திருமருகல் ஒன்றியத்தில் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை விட்டுவிட்டு பெய்தது.


Next Story