ராமேசுவரம் பகுதியில் விடிய, விடிய மழை
ராமேசுவரம் பகுதியில் விடிய விடிய மழை பெய்தது. பாம்பனில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. 2 ஆயிரம் படகுகள் 4-வது நாளாக நேற்று மீன்பிடிக்க செல்லவில்லை.
ராமேசுவரம்,
ராமேசுவரம் பகுதியில் விடிய விடிய மழை பெய்தது. பாம்பனில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. 2 ஆயிரம் படகுகள் 4-வது நாளாக நேற்று மீன்பிடிக்க செல்லவில்லை.
விடிய, விடிய மழை
இலங்கையை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருந்த நிலையில், அது இலங்கையின் திரிகோணமலை-மட்டக்களப்பு இடையே கரையை கடந்தது. இதன்காரணமாக ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும், கடல் சீற்றமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. இந்த நிலையில் ராமேசுவரம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதலே மழை பெய்ய தொடங்கியது. விடிய-விடிய மழை பெய்த வண்ணமாக இருந்தது. அதுபோல் நேற்று பகலிலும் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது.
நேற்று பகலிலும் இந்த மழை நீடித்தது. சிறுவர்-சிறுமியர், மாணவர்கள் மழையில் நனைந்தபடியும், குடை பிடித்தபடியும் பள்ளிகளுக்கு சென்றனர். மழை காரணமாக நகரின் பல இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது.
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவிடம் எதிரே உள்ள சாலை முன்பும் மழைநீர் தேங்கி நின்றது.
3-ம் எண் புயல் கூண்டு
பாம்பன், தங்கச்சிமடம், தனுஷ்கோடியிலும் நேற்று முன்தினம் இரவிலும், நேற்று பகலிலும் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது. காற்றழுத்த தாழ்வு நிலை கரையை கடந்த நிலையிலும், கடல் சீற்றமாக காணப்பட்டதால் பாம்பன் துறைமுக அலுவலகத்தில் நேற்று 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு இருந்தது.
அதுபோல் 4-வது நாளாக ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் விசைப்படகுகள், நாட்டு படகுகள், பைபர் படகுகள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் கரையோர கடல் பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
ராமநாதபுரம்-பரமக்குடி
இதே போல் ராமநாதபுரம், பரமக்குடி உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை நீடித்தது. சில இடங்களில் சாரலாகவும், சில இடங்களில் பலத்த மழையாகவும் பெய்தது.
அதே நேரத்தில் பல இடங்களில் அறுவடைக்கு தயார் ஆகி இருந்த நெற்பயிர்கள் மழையால் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.