தேன்கனிக்கோட்டை பகுதியில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை பகுதியில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை ெபய்தது.
கனமழை
தமிழகத்தில் மார்ச் மாதம் தொடங்கியது முதல் கடுமையான வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. தேன்கனிக்கோட்டை பகுதியில் கடந்த சில மாதங்களாகவே கடுமையான குளிர் மற்றும் பனிமூட்டம் காணப்பட்டு வந்த நிலையில் தற்போது வாட்டி வதைக்கும் வெயிலால் பொதுமக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். மற்ற நகரங்களைப் போல தேன்கனிக்கோட்டை பகுதிகளிலும் கடுமையான வெயில் சுட்டெரித்து வருகிறது.
இந்த நிலையில் தேன்கனிக்கோட்டை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று காலை முதலே கடுமையான வெயில் காணப்பட்டு வந்தது. இந்த நிலையில் மாலை நேரத்தில் தேன்கனிக்கோட்டை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் திடீரென பலத்த சூறாவளி காற்று மற்றும் இடி, மின்னலுடன் கனமழைபெய்தது.
விவசாயிகள் கவலை
சுமார் ½ மணி நேரத்துக்கு மேலாக வெளுத்து வாங்கிய இந்த கனமழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. சுட்டெரிக்கும் வெயிலுக்கு இதமாக பெய்த இந்த திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அதேநேரம் தேன்கனிக்கோட்டை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள பல்வேறு கிராமங்களில் ஆலங்கட்டியடன் கூடிய மழையும் பெய்தது. பல்வேறு இடங்களில் பொதுமக்கள் ஆலங்கட்டிளை கைகளில் அள்ளி சென்றனர். பலத்த காற்று மற்றும் ஆலங்கட்டி மழையால் பசுமை குடில்கள், விவசாய தோட்டங்கள் சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.