ராமேசுவரம் பகுதியில் விடிய, விடிய மழை
ராமேசுவரம் பகுதியில் விடிய, விடிய பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது.
ராமேசுவரம்,
ராமேசுவரம் பகுதியில் விடிய, விடிய பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது.
விடிய, விடிய மழை
தமிழகத்தில் தற்போது கோடைகால சீசன் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் கடந்த சில வாரங்களாகவே வெயிலின் தாக்கம் கடுமையாகவே இருந்து வந்தது. இதனிடையே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. ராமேசுவரம் பகுதியில் சில வாரங்களாகவே கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இதனிடையே ராமேசுவரம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் பலத்த மழை பெய்தது. இந்த மழை நேற்று அதிகாலை வரையிலும் நீடித்தது.
இரவு முழுவதும் பெய்த மழையால் பஸ் நிலையம் அருகே காட்டு பிள்ளையார் கோவில் எதிரில் உள்ள தேசிய நெடுஞ்சாலை மற்றும் தாஸபக்த ஆஞ்சநேயர் கோவில் எதிரே உள்ள தேசிய நெடுஞ்சாலையிலும் மழைநீர் அதிக அளவில் குளம் போல் தேங்கி நின்றது.
தண்ணீர் தேங்கியது
முக்கிய சாலைகளில் தேங்கி நின்ற தண்ணீரில் ஆட்டோ, இரு சக்கர வாகனம், கார் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் தத்தளித்தபடியே சென்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். மேலும் நடந்து சென்ற பொதுமக்களும் சிரமப்பட்டனர். இரவு முழுவதும் பெய்த மழையால் கோவில் ரதவீதி சாலை, தனுஷ்கோடி சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மணிமண்டப கட்டிடத்தின் முன்பும் சாலையில் மழை நீர் தேங்கிநின்றது.
தற்போது பெய்து வரும் இந்த மழையால் வெப்பத்தின் தாக்கம் சற்று தணிந்துள்ளதால் ராமேசுவரம் பகுதியில் உள்ள பொதுமக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல் பாம்பன், தங்கச்சிமடம், ராமநாதபுரம் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.