தஞ்சை மாவட்டத்தில் தொடர் மழை: அறுவடை செய்த நெல்லை 5 நாட்களாக காய வைக்கும் அவலம்


தஞ்சை மாவட்டத்தில் தொடர் மழை:  அறுவடை செய்த நெல்லை 5 நாட்களாக காய வைக்கும் அவலம்
x

தஞ்சை மாவட்டத்தில் தொடர் மழையால் நனைந்த நெல்லை விவசாயிகள் 5 நாட்களாக காய வைத்து வருகிறார்கள். கொள்முதல் நிலையங்களில் 22 சதவீதம் ஈரப்பதம் வரை அனுமதிக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் தொடர் மழையால் நனைந்த நெல்லை விவசாயிகள் 5 நாட்களாக காய வைத்து வருகிறார்கள். கொள்முதல் நிலையங்களில் 22 சதவீதம் ஈரப்பதம் வரை அனுமதிக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

நெற்களஞ்சியம்

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும்.வழக்கமாக டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்படும். குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரித்து காணப்படும்.

தாமதமாக திறந்தால் குறுவை பரப்பளவு குறைந்து சம்பா சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். ஆனால் இந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக முன்னதாக அதாவது மே மாதத்திலேயே தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் குறுவை சாகுபடி அதிக அளவு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அறுவடை தீவிரம்

அதன்படி அதிக அளவாக 1 லட்சத்து 86 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெற்றது. தற்போது குறுவை அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள 9 தாலுகாக்களிலும் சாகுபடி அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதுவரை 1 லட்சத்து 25 ஆயிரம் ஏக்கரில் அறுவடை பணிகள் முடிவடைந்துள்ளன.

தஞ்சை, ஒரத்தநாடு, அம்மாப்பேட்டை, திருவையாறு பகுதிகளில் சம்பா, தாளடி சாகுபடி பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது பெய்த மழை காரணமாக குறுவை அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டன. மாவட்டத்தில் இன்னும் 51 ஆயிரம் ஏக்கரில் அறுவடை பணிகள் நடைபெற வேண்டி உள்ளது.

ஈரப்பதம் அதிகரிப்பு

தற்போது பெய்த தொடர் மழை காரணமாக வயல்களில் ஈரப்பதம் அதிகமாக உள்ளதால் அறுவடை பணிகள் தாமதம் ஆகி உள்ளது. வயல்கள் காய்ந்த பகுதிகளில் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தாலும் நெல்லின் ஈரப்பதம் அதிக அளவில் காணப்படுகிறது.

இதனால் அறுவடைசெய்த நெல்லை விவசாயிகள் சாலையேரங்களில் குவித்து வைத்து காய வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் சில இடங்களில் முன்கூட்டியே அறுவடையும் நடைபெற்று வருகின்றன.

5 நாட்களுக்கும் மேல்.....

தஞ்சையை அடுத்த சூரக்கோட்டை பகுதியில் இருந்து ஒரத்தநாடு வரை சாலையோரங்களில் ஆங்காங்கே நெல்லை குவியல், குவியலாக குவித்து வைத்து காய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.

தற்போது வெயிலும் மந்த நிலையில் காணப்படுவதால் 4 நாட்கள் அல்லது 5 நாட்கள் நெல்லை காய வைத்து வருகிறார்கள். இதற்காக விவசாயிகள் கூலிக்கு ஆட்கள் அமர்த்தி உள்ளனர். இதனால் கூடுதல் செலவு ஆகிறது. மேலும் ஈரப்பதம் அதிகமாக உள்ளதால் 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

22 சதவீதம் வரை அனுமதி

தமிழக காவிரி விவசாயிகள் சங்க தலைவர் பழனியப்பன்:- குறுவை அறுவடை பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. அரசு கொள்முதல் நிலையங்களில் 17 சதவீதம் வரை மட்டுமே அனுமதி அளித்துள்ளது. ஆனால் ஏற்கனவே பெய்த மழை காரணமாக நெல்லில் ஈரப்பதம் அதிகமாக உள்ளது. எனவே விவசாயிகள் சாலையோரங்களில் குவித்து வைத்துகாய வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே அரசு விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றும் வகையில் 22 சதவீதம் வரை ஈரப்பதத்தை அனுமதித்து நெல்லை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயிகளுக்கு இழப்பு

விவசாய தொழிலாளர் சங்க துணைத்தலைவர் ஜீவக்குமார்:- இந்த ஆண்டு வறட்சியை விட வெள்ளத்தால் தான் விவசாயிகள் அதிக இழப்பை சந்தித்து வருகின்றனர். ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறுவைக்கு விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இல்லை. விவசாயிகள் தான் தொடர்ந்து இழப்பை சந்தித்து வருகிறார்கள். இந்த ஆண்டு விளைச்சல் அதிக அளவில் இருந்தாலும் நெல்லின் ஈரப்பதம் மழைகாரணமா அதிகமாக உள்ளது. 17 சதவீதம் வரை மட்டுமே நெல் கொள்முதல் செய்வதால், நெல்லை காய வைப்பதால் விவசாயிகளுக்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது. எனவே தாமதம் இன்றி விவசாயிகளிடம் நெல்லை கொள்முதல் செய்யும் வகையில் 22 சதவீதம் வரை அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விவசாயிகளின் இருப்பிடத்திற்கே சென்று கொள்முதல் செய்யும் வகையில் நடமாடும் மொபைல் நெல் கொள்முதலை செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story