தஞ்சையில் கொட்டி தீர்த்த மழை: வடிகால் உடைப்பு; வீடுகளுக்குள் புகுந்த கழிவுநீர்
தஞ்சையில் கொட்டி தீர்த்த மழையின் காரணமாக வடிகால் உடைந்ததால் வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்தது. சாய்ந்த மின்கம்பத்தை உடனடியாக சீரமைக்கும் பணியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டார்.
தஞ்சையில் கொட்டி தீர்த்த மழையின் காரணமாக வடிகால் உடைந்ததால் வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்தது. சாய்ந்த மின்கம்பத்தை உடனடியாக சீரமைக்கும் பணியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டார்.
மழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. தஞ்சை மாநகரில் நேற்றுமாலை 3½ மணி நேரத்திற்கும் மேல் மழை பெய்தது. இடியுடன் பெய்த பலத்த மழையின் காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தஞ்சை கீழவாசல் கந்தப்பொடிக்கார தெருவில் இடிப்பு அளவுக்கு தண்ணீர் தேங்கி நின்றது.
இதனால் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. இதன்காரணமாக அப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர். தஞ்சை ரெயில் நிலையத்தின் நுழைவு பகுதியில் டிக்கெட் கொடுக்கும் இடத்திற்கு முன்பு மழை தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் டிக்கெட் எடுக்க வந்த பயணிகள் தங்களது உடமைகளை தரையில் வைக்க முடியாமல் அவதிப்பட்டனர்.
வீடுகளுக்குள் புகுந்த கழிவுநீர்
தஞ்சை கொடிமரத்துமூலை பகுதியில் உள்ள அகழியில் தண்ணீர் நிரம்பியதால் அங்கிருந்து வடிகால் மூலம் வடவாற்றிற்கு தண்ணீர் சென்று கொண்டிருந்தது. ஆனால் இந்த வடிகாலில் அடைப்பு ஏற்பட்டு உடைப்புகள் ஏற்பட்டதால் தண்ணீர் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் அடங்கிய குடியிருப்புகளுக்குள் புகுந்தது. கழிவுநீரும் மழைநீருடன் கலந்து இருந்தால் மக்கள் சிரமத்திற்கு ஆளாயினர்.
தஞ்சை டவுன் போலீஸ் நிலையம் ரோட்டில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் சென்று கொண்டிருந்தது. இந்த தண்ணீரின் வழியாக தான் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வந்தன. மேலும் அதே ரோட்டில் இருந்த பாதாள சாக்கடை குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறி மழைநீருடன் கலந்தது.
மின்கம்பம் சாய்ந்தது
இந்த தண்ணீர் எல்லாம் பாலோப்பநந்தவனம் பகுதிக்குள் நுழைந்தது. இதனால் தெருவில் இடுப்பு அளவுக்கு மழைநீருடன் கழிவுநீரும் தேங்கி நின்றது. இதனால் அந்த வழியாக மக்கள் செல்ல முடியாமல் மிகவும் அவதிப்பட்டனர். மேலும் இந்த கழிவுநீர் வீடுகளுக்குள்ளும் புகுந்தது. இந்த தண்ணீரை வடிய வைப்பதற்காக வடிகாலில் ஏற்பட்டு இருந்த அடைப்புகளை தொழிலாளர்கள் அகற்றினர்.
தஞ்சை காந்திஜிசாலையில் உள்ள புதுஆற்றுப்பாலம் அருகே ராணிவாய்க்கால் தண்ணீர் வேகமாக வந்ததால் ஆற்றங்கரையோரத்தில் அரிப்பு ஏற்பட்டது. இந்த அரிப்பின் காரணமாக அருகில் இருந்த மின்கம்பம் சாய்ந்தது. இதை பார்த்த சிலர் உடனடியாக மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனால் மின்சாரம் நிறுத்தப்பட்டது. மேலும் பொக்லின் எந்திரம் வரவழைக்கப்பட்டு, சாய்ந்த மின்கம்பம் உடனடியாக நிமிர்த்தி வைக்கப்பட்டது.
கலெக்டர் ஆய்வு
இதை அறிந்த தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்து, பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும் தஞ்சை ரெயில்வே கீழ்பாலத்தில் தேங்கி நின்ற தண்ணீரை பார்த்த அவர், உடனடியாக தண்ணீரை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நெடுஞ்சாலைத்துறையினருக்கு அறிவுறுத்தினார். கலெக்டருடன் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், ஆணையர் சரவணகுமார் மற்றும் அதிகாரிகளும் உடன் சென்றனர்.