மழை வெள்ளத்தடுப்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பாகவே முடிக்க வேண்டும்


மழை வெள்ளத்தடுப்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பாகவே முடிக்க வேண்டும்
x

மழைவெள்ள தடுப்பு பணிகள் அனைத்தையும் போர்க்கால அடிப்படையில் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பாகவே முடிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று சென்னை கலைவாணர் அரங்கில், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

சென்னை, சுற்றியுள்ள மாவட்டங்கள் மற்றும் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் கண்டறியப்பட்டு, தொடர்ந்து நிறைவேற்றப்படும் பணிகள் அனைத்தையும் மிகவிரைவில் முடிவுக்கு கொண்டு வரவேண்டும்.

சென்னையிலே கடந்த ஆண்டு அதிக அளவிலே வெள்ள பாதிப்புக்குள்ளான பகுதிகள், வெள்ள அபாயம் உள்ள பகுதிகள் ஆகியவற்றில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகமிக அவசியமானது. செம்பரம்பாக்கம், புழல் உள்ளிட்ட ஏரிகளில் ஏற்கனவே போதிய அளவில் நீர் இருப்பு உள்ளதால், பருவமழையையொட்டி இந்த ஏரிகளின் நீர்வரத்து, நீர் இருப்பு அளவு ஆகியவற்றை தொடர்ந்து கண்காணித்து, அதை முறையாக கையாள வேண்டும். மழைவெள்ள தடுப்பு தொடர்பாக தொடங்கப்பட்ட பணிகள் அனைத்தையும் போர்க்கால அடிப்படையில் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பாகவே முடிக்க வேண்டும்.

மெத்தனம் கூடாது

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்களும் மழைக்காலத்திற்கு முன்பாக ஓரிரு முறை தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு சென்று அதை பார்வையிட வேண்டும். அந்த மாவட்டத்திலேயே தங்கி, பள்ளி கட்டிடங்கள் மற்றும் நிவாரண மையங்களை ஆய்வு செய்யுங்கள்.

கடந்த ஆண்டு பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, முக்கிய கால்வாய்களில் தூர்வாரினோம். எனவே இம்முறை சென்னை நகரில் முக்கியப் பகுதிகளில் மழைநீர் தேங்காது என்ற நம்பிக்கை ஓரளவு உள்ளது. நீர் தேங்காது என்கிற நினைப்போடு நீங்களும் மெத்தனமாக இருந்து விடக்கூடாது.

ஒருங்கிணைந்து...

மழைக்காலத்தில் பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளை சார்ந்த அலுவலர்களும், பல்வேறு அரசுத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அரசுத்துறையுடன் சேர்ந்து ஒவ்வொரு பகுதியிலும் இருக்கக்கூடிய குடியிருப்பு சங்கங்கள் மற்றும் அந்த பகுதி மக்களுடன் இணைத்து முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால் அது நல்ல பலன் கிடைக்கும்.

ஒவ்வொரு மாநகராட்சி பகுதியிலும் 24 மணிநேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்படும் அவசர உதவி மையங்கள் முறையாக செயல்படுவதை கண்காணிப்பு அலுவலர்கள் உறுதிசெய்ய வேண்டும்.

பொறுப்பு அலுவலர்

கடந்த முறை வானிலை எச்சரிக்கை தகவல்களை குறித்த காலத்தில் பெறுவதில் தாமதம் இருந்தது. உரிய காலத்தில் வானிலை ஆராய்ச்சி மையத்திலிருந்து சரியான தகவல்களை பெறுவதோடு தனியார் வானிலை ஆராய்ச்சியாளர்கள் அளிக்கும் தரவுகளையும், வருவாய் துறையில் ஒப்பிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மக்களுக்கான அறிவிப்புகளைச் நீங்கள் செய்ய வேண்டும்.

நிவாரண மையங்களில் பொதுமக்களை தங்க வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்போது, அவர்களுக்கு தரமான உணவு, குடிநீர், மின்சாரம், மருத்துவம் மற்றும் சுகாதார வசதிகள் நீங்கள் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். ஒவ்வொரு நிவாரண முகாமிற்கும் ஒவ்வொரு பொறுப்பு அலுவலர் நியமிக்கப்பட வேண்டும்.

அதிக கவனம்

கவனமெடுத்து செயல்பட்டால், கடும் மழையினால் பாதிக்கப்படக்கூடிய ஏழை, எளிய மக்கள், உழவர்கள், மீனவர்களுக்கு ஏற்படக்கூடிய துயரை நாம் ஓரளவுக்கு குறைக்க முடியும். அதுதான் இந்த அரசினுடைய நோக்கம். பொதுத் தொலைபேசி எண்களை பரப்ப வேண்டும். நோய்கள் பரவாமல் தடுக்க வேண்டும். பேரிடர் மேலாண்மையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மின் விபத்துகள் ஏற்படாமல் தடுக்க வேண்டும். மொத்தத்தில் மக்களை காக்க வேண்டும். அதுவே நமது இலக்கு. எனவே நீங்கள் அனைவரும் இதில் முழு கவனத்துடன், ஈடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Related Tags :
Next Story