கூத்தாநல்லூர் பகுதியில் பலத்த மழை
கூத்தாநல்லூர் பகுதியில் பலத்த மழை பெய்தது.
கூத்தாநல்லூர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பரவலாக மழை பெய்தது. அதன்பின்னர் வெயில் அடிப்பதும், வானம் மேகமூட்டம் சூழ்ந்து காணப்படுவதுமாக இருந்து வந்தது. இந்த நிலையில், ஐப்பசி மாதத்தில் அடை மழை பெய்யும் என்று சொல்வார்கள். அதனை உணர்த்தும் வகையில் நேற்று ஐப்பசி முதல் தேதியில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, நேற்று காலை முதல் மாலை வரை ஓரளவு வெயில் அடித்தது. ஆனால், அடிக்கடி மேகமூட்டம் சூழ்ந்து காணப்பட்டது. இதையடுத்து நேற்று மாலை 5.20 மணிக்கு லேசான தூறலுடன் மழை பெய்ய தொடங்கியது. பின்னர், படிப்படியாக அதிகரித்து காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால், கூத்தாநல்லூர் பகுதியில் உள்ள வடபாதிமங்கலம், லெட்சுமாங்குடி, பொதக்குடி, பூதமங்கலம், சித்தனங்குடி, வேளுக்குடி, பாரதிமூலங்குடி, பூந்தாழங்குடி, கார்நாதன்கோவில், ஓகைப்பேரையூர், பழையனூர், நாகங்குடி, அதங்குடி, விழல்கோட்டகம், வெள்ளக்குடி, திருராமேஸ்வரம், ஓவர்ச்சேரி, குலமாணிக்கம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தாழ்வான இடங்களிலும், வயல்களிலும் மழை நீர் ேதங்கி நின்றது.