மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக மழை


மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக மழை
x
தினத்தந்தி 26 Dec 2022 12:15 AM IST (Updated: 26 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.

மயிலாடுதுறை

தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் மழை தொடங்கியதில் இருந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் இடையிடையே பலத்த மழை கொட்டி வருகிறது. தொடர் மழை காரணமாக ஆறுகளில் தண்ணீர் வரத்தும் உள்ளது.

கடந்த நவம்பர் மாதம் ஒரே நாளில் அதீத கனமழை கொட்டித்தீர்த்தது. இதில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 44 செ.மீ. மழை பெய்தது. இந்த மழை காரணமாக மாவட்டம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியது.

பரவலாக மழை

இந்த அதீத கனமழைக்கு பிறகு விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. மாண்டஸ் புயலின்போதும் மழை பெய்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. இது படிப்படியாக நகர்ந்து வருவதால் மயிலாடுதுறை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மிதமான முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி நேற்று அதிகாலை முதல் மயிலாடுதுறை மாவட்டத்தில் விட்டு விட்டு பரவலாக லேசான மழை பெய்தது. இடையிடையே இதமான வெயிலும் காணப்பட்டது. இதன் காரணமாக மிதமான குளிர் காற்றும் வீசியது.

மழை நிலவரம்

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தரங்கம்பாடியில் 12 மில்லி மீட்டர் மழை பதிவானது. மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் பதிவான மழையளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:- செம்பனார்கோவில்-8, கொள்ளிடம்-7, சீர்காழி-4, மயிலாடுதுறை-1.


Next Story