தஞ்சையில் இடியுடன் மழை


தஞ்சையில் இடியுடன் மழை
x

தஞ்சையில் இடியுடன் மழை பெய்தது

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் ஓரிரு நாட்களாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. தஞ்சையில் நேற்று முன்தினம் இடியுடன் மழை பெய்தது. ஆனால் நேற்று காலை முதல் மாலை வரை மழை பெய்யவில்லை. ஆனால் தஞ்சை மாநகரில் திடீரென இரவு 9.55 மணி அளவில் குளிர்ந்த காற்று வீசியது. சிறிது நேரத்தில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது. அவ்வப்போது இடி-மின்னலும் வெட்டிக் கொண்டிருந்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஏற்கனவே தஞ்சை தெற்குவீதி, மேலவீதி, வடக்கு வீதியில் வடிகால் மீதுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருவதால் வடிகால் முழுமையாக கட்டி முடிக்கப்படாத நிலையில் கழிவுநீருடன் மழைநீர் கலந்து வீதிகளில் ஓடியது. தஞ்சை மட்டுமின்றி அதன் சுற்றுப்பகுதிகளில் பல்வேறு இடங்களிலும் மழை பெய்தது. இந்த மழையால் பூமி குளிர்ந்து குளிர்ந்த காற்று வீசியது.

மழையின் காரணமாக தஞ்சை வி.பி.கோவில் தெருவும், எம்.கே.மூப்பனார் சாலையும் சந்திக்கும் பகுதியில் சாலையோரத்தில் நின்ற வாகை மரம் சாய்ந்தது. சாய்ந்த இந்த மரம் சாலையின் குறுக்கே விழுந்ததுடன் எதிரே இருந்த கட்டிடத்தின் மீதும் விழுந்தது. அதில் பெட்டிக்கடையின் முன்பு தகரத்தால் போடப்பட்ட மேற்கூரை சேதம் அடைந்தது. மேலும் ஏ.டி.எம். முன்பு நிறுத்தப்பட்டு இருந்த மொபட்டும் மரக்கிளைகளுக்குள் சிக்கிக் கொண்டது. இதுகுறித்த தகவலின்பேரில் தஞ்சை தீயணைப்பு நிலைய அலுவலர் பொய்யாமொழி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து அந்த மரத்தை வெட்டி அகற்றினர். இந்த பணியின் போது மின்சாரம் நிறுத்தப்பட்டது.






Next Story