உப்பிலியபுரம், தா.பேட்டை, காட்டுப்புத்தூர் பகுதிகளில் மழை
உப்பிலியபுரம், தா.பேட்டை, காட்டுப்புத்தூர் பகுதிகளில் மழை பெய்தது.
உப்பிலியபுரம்:
உப்பிலியபுரம் பகுதியில் நேற்றிரவு சூறைக்காற்று, இடியுடன் மழை பெய்தது. முன்னதாக பகல் முழுவதும் அனல் காற்று வீசிய நிலையில், நேற்று மாலை குளிர்ந்த காற்று வீச தொடங்கியது. இரவில் சூறைக்காற்று வீசியதால் சில மரங்கள் வேருடன் சாய்ந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர். இதனால் உப்பிலியபுரம், மற்றும் பச்சைமலை, தென்புறநாடு பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டு, இருளில் மூழ்கியது. சூறைக்காற்றினால் ஏற்பட்ட சேதம் பற்றி நாளை(இன்று) தெரியவரும் என்று தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேபோல் தா.பேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மதிய நேரங்களில் பொதுமக்கள் வாகனங்களில் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் தா.பேட்டை பகுதியில் நேற்று இரவு வானில் கருமேகங்கள் சூழ்ந்தன. பின்னர் இடி, மின்னலுடன் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பரவலாக கோடை மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள், விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.மேலும் தொட்டியம் மற்றும் காட்டுப்புத்தூர் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். வாழை, வெற்றிலை கொடிக்கால் பயிர்கள் மிகவும் வாடிய நிலையில் இருந்தது. இந்நிலையில் நேற்று காட்டுப்புத்தூர், சீலைப்பிள்ளையார்புதூர், நத்தம், காடுவெட்டி, உன்னியூர், பெரிய பள்ளிபாளையம், சின்னப்பள்ளிபாளையம், சீத்தபட்டி, பிடாரமங்கலம் மற்றும் காட்டுப்புத்தூரை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வாழை மற்றும் வெற்றிலை கொடிக்கால் பயிர்களுக்கு இந்த மழை மிகுந்த பயனுள்ளதாக அமையும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.