நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ய வேண்டி மும்மத சிறப்பு வழிபாடு


நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ய வேண்டி மும்மத சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 24 Jun 2023 12:45 AM IST (Updated: 24 Jun 2023 5:33 PM IST)
t-max-icont-min-icon

முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ய வேண்டி மும்மத சிறப்பு வழிபாடு நடந்தது.

தேனி

முல்லைப்பெரியாறு அணை

தேனி, மதுரை, திண்டுக்கல் சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் நீர்ப்பாசன ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை திகழ்கிறது. இந்த அணை தண்ணீர் மூலம் தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் சுமார் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலம் இருபோக பாசன வசதி பெற்று வருகிறது.

முதல் போக பாசனத்திற்கு கடந்த 1-ந் தேதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் மூலம் கூடலூர், கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர் ஆகிய பகுதிகளில் நெல் நாற்றுகள் விதைத்தும், நடவு பணி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் தென்மேற்கு பருவ மழை இன்னும் சரியாக பெய்யவில்லை மிகவும் மழை குறைவாக இருப்பதால் அணைக்கு நீர்வரத்தும் குறைவாக உள்ளது.

மும்மத சிறப்பு வழிபாடு

152 அடி உயரம் உள்ள முல்லைப்பெரியாறு அணையில் நேற்றைய நீர்மட்டம் 116.30 அடியாக உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 50 கன அடி, அணையிலிருந்து வினாடிக்கு 356 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் முதல் போக பாசனம் பாதிக்கும் அபாயம் உள்ளது. இதைத்தொடர்ந்து முல்லைப்பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ய வேண்டும் என்று வேண்டி விவசாயிகள், இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் ஆகிய மும்மதங்களை சேர்ந்தவர்கள் இணைந்து சிறப்பு கூட்டு வழிபாடு நடத்தினர்.

தேக்கடியில் முல்லைப்பெரியாறு அணையில் தமிழகத்திற்கு, தண்ணீர் திறந்து விடப்படும் மதகு பகுதியில் நடைபெற்ற இந்த சிறப்பு வழிபாட்டில் கூடலூர், கம்பம், சின்னமனூர், உத்தமபாளையம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நீரினை பயன்படுத்துவோர் சங்க நிர்வாகிகள் குமரேசன் கிருஷ்ணமூர்த்தி, சுகுமாரன், விஜயகுமார், பொண்ணு பிள்ளை, ராஜா, பெரியாறு நீர்ப்பாசன உதவி செயற்பொறியாளர் குமார், உத்தமபாளையம் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கணேசமூர்த்தி மற்றும் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.

முன்னதாக தேக்கடியில் உள்ள பொதுப்பணித்துறை வளாகத்தில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலில் இந்து மதத்தினர் சிறப்பு பூஜையும், பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உள்ள அறைகளில் முஸ்லிம், கிறிஸ்தவ மதத்தினர் தனித்தனியாக வழிபாடு நடத்தினர்.


Next Story