குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீர்; வாகன ஓட்டிகள் அவதி
உடுமலை கபூர்கான் வீதியில் குளம் போல் தேங்கி நிற்கம் மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
வடிகால் இல்லை
உடுமலையின் பிரதான சாலைகளில் ஒன்றான கபூர்கான் வீதியில் உழவர்சந்தை உள்ளது. இங்கு சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். விவசாயிகளின் நேரடி விற்பனை என்பதாலும் குறைந்த விலையில் புத்துணர்வான காய்கறிகள் கிடைக்கும் என்பதாலும் பொதுமக்கள் ஆர்வத்தோடு வந்து வாங்கி செல்கின்றனர்.
அதுமட்டுமின்றி இந்த சாலை சுற்றுப்புற கிராமங்களுக்கு செல்வதற்கும் உதவிகரமாக உள்ளது. ஆனால் போக்குவரத்து நிறைந்த இந்த சாலையில் மழைநீர் வடிகால் கட்டமைப்பு முறையாக ஏற்படுத்தவில்லை. இதனால் மழை பெய்யும் போது சாலையில் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாவது தொடர்கதையாக உள்ளது.
குளம் போல் தண்ணீர்
அந்த வகையில் நேற்று முன்தினம் மாலை பெய்த பலத்த மழையால் சாலையின் பாதி அளவிற்கு தண்ணீர் குளம் போல் தேங்கியது.அதை அகற்றுவதற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் உழவர் சந்தைக்கு காய்கறி கொண்டு வந்த விவசாயிகள் அவதிக்கு உள்ளானார்கள்.
இதே போன்று நேதாஜி விளையாட்டு மைதானத்திலும் தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றது. தாழ்வான பகுதியில் மண்ணை கொட்டி சீரமைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டும் நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் உள்ளது.
மண்ணைகொட்டி சீரமைக்க வேண்டும்
தேங்கி உள்ள தண்ணீரில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெற முடியாமலும் பொதுமக்கள் நடை பயிற்சியை தொடர்வதிலும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
எனவே கபூர்கான் சாலையில் மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்துவதற்கும் நேதாஜி விளையாட்டு மைதானத்தின் தாழ்வான பகுதியில் மண்ணைக்கொட்டி சீரமைப்பதற்கும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.