நெசவாளர் காலனி அரசு பள்ளிக்குள் பாய்ந்த தண்ணீர்


நெசவாளர் காலனி அரசு பள்ளிக்குள் பாய்ந்த தண்ணீர்
x
திருப்பூர்


திருப்பூரில் கொட்டித்தீர்த்த மழையால் நெசவாளர் காலனி பள்ளிக்குள் மழைநீர் புகுந்தது. வகுப்பறைகளை தண்ணீர் சூழ்ந்தது. இதுபோல் வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது.

கொட்டித்தீர்த்த மழை

திருப்பூர் மாநகரில் நேற்று காலை முதல் மதியம் வரை வெயில் வாட்டி வதைத்தது. மாலை 3.30 மணிக்கு மேல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதன்பிறகு திடீரென பலத்த காற்று வீசியதை தொடர்ந்து தூறலுடன் மழை பெய்தது. 3.45 மணிக்கு தொடங்கிய மழை சுமார் அரை மணி நேரம் கொட்டித்தீர்த்தது.

திருப்பூர் அவினாசி ரோடு, நெசவாளர்காலனி, புதிய பஸ் நிலையம் சுற்றுப்புற பகுதிகளில் மழை பெய்தது. திடீரென மழை பெய்ததால் வாகன ஓட்டிகள், சாலையோர வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். இதுபோல் கோவில்வழி, முத்தனம்பாளையம், தாராபுரம் ரோடு பகுதிகளிலும் மழை கொட்டியது. நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்லும் நேரத்தில் மழை பெய்ததால் மாணவ-மாணவிகள் பள்ளி வளாகத்தில் இருந்தனர்.

நெசவாளர் காலனி நகராட்சி பள்ளி

நெசவாளர் காலனி நகராட்சி உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் மழைநீர் பெருக்கெடுத்து பாய்ந்தது. வழக்கமாக பள்ளி வளாகம் தாழ்வாக இருப்பதால் ஒவ்வொரு மழைக்கும் அந்த பகுதியில் உள்ள மழைநீர் பள்ளியை நோக்கி பெருக்கெடுத்து பாயும். நேற்று பெய்த மழையால் கழிவுநீருடன் மழைநீரும் சேர்ந்து பள்ளி வளாகத்தில் புகுந்தது.

இடுப்பளவுக்கு மழைநீர் தேங்கியது. 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள பள்ளி கட்டிடத்தை மழைநீர் சூழ்ந்தது. இதனால் பள்ளி மாணவர்களை அருகில் உள்ள 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள கட்டிடத்துக்கு அழைத்துச்சென்றனர். மழை விட்டதும் பெற்றோர் வந்து மாணவ-மாணவிகளை அழைத்துச்சென்றனர்.

வகுப்பறையை சூழ்ந்த மழைநீர்

இதுகுறித்து பெற்றோர் கூறும்போது, 'இந்த பள்ளியில் 1,200 மாணவ-மாணவிகள் படிக்கிறார்கள். ஏழை, எளிய மக்கள் தங்கள் குழந்தைகளை படிக்க வைப்பதற்கு இந்த பகுதியில் இந்த ஒரு பள்ளியே உள்ளது. தனியார் பள்ளிகள் தான் அதிகம் உள்ளது. இங்கு ஒரு வகுப்பறைக்கு அளவுக்கு அதிகமான மாணவர்கள் இட நெருக்கடியில் படிக்கிறார்கள்.

இந்தநிலையில் ஒவ்வொரு மழைக்கும் பள்ளி வளாகத்தில் தண்ணீர் தேங்குகிறது. இடுப்பளவு தண்ணீரில் சென்று குழந்தைகளை நாங்கள் அழைத்து வருகிறோம். சிறுவர்கள் இந்த நீரில் மூழ்கி விடுவார்கள். கழிவுநீருடன் மழைநீர் தேங்குவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து தண்ணீர் தேங்காமல் இருக்க உதவ வேண்டும்' என்றனர்.

வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்

திருப்பூர் யூனியன் மில் ரோட்டில் இருந்து ஸ்ரீசக்தி தியேட்டர் முன் மழைநீர் பெருக்கெடுத்து பாய்ந்தது. அது நொய்யல் ஆற்றில் போய் கலந்தது. அந்த வழியாக இருசக்கர வாகன ஓட்டிகள் செல்ல முடியாத அளவுக்கு தண்ணீர் வேகமாக சென்றது. ஈஸ்வரன் கோவில் செல்லும் தரைப்பாலத்தின் மேல்பகுதியில் மழைநீர் அதிகமாக பாய்ந்தது. இதன்காரணமாக அந்த வழியாக வாகன போக்குவரத்து தடைபட்டது.

காந்திநகர் அன்னபூர்ணா லே அவுட் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. கழிவுநீர் கால்வாய் பாதை ஆக்கிரமிப்பில் இருப்பதால் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து விடுவதாக அப்பகுதி மக்கள் ஆதங்கத்தோடு தெரிவித்தனர். இதுபோல் பத்மாவதிபுரம் பகுதியில் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. பாத்திரங்களில் சேகரித்து தண்ணீரை அப்புறப்படுத்தினார்கள்.

மின்கம்பம் சாய்ந்தது

திருப்பூர் புதிய பஸ் நிலையம் பகுதியில் பி.என்.ரோட்டில் பலத்த காற்றுக்கு மின்கம்பம் சாய்ந்தது. இதுதொடர்பாக மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பார்க் ரோட்டில் மழைநீர் அதிகம் பாய்ந்தது. ஊத்துக்குளி ரோடு ஒற்றைக்கண் பாலத்தில் அதிகமாக தண்ணீர் பாய்ந்ததால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். மழைக்கு லட்சுமிநகரில் உள்ள பெரிய மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது.


Next Story