தேனி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழை: சாலையில் விழுந்த மரங்களால் போக்குவரத்து பாதிப்பு: வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் மறியல்


தேனி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழை:  சாலையில் விழுந்த மரங்களால் போக்குவரத்து பாதிப்பு:  வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் மறியல்
x
தினத்தந்தி 13 Nov 2022 12:15 AM IST (Updated: 13 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் சாலையில் விழுந்த மரங்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

தேனி

கனமழை

தேனி மாவட்டத்துக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்தது. இதற்காக தேனி மாவட்டத்துக்கு 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டு இருந்தது. அதன்படி, நேற்று முன்தினம் இரவில் தேனி, போடி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. விடிய, விடிய இந்த மழை நீடித்தது.

தொடர்ந்து நேற்று காலை வானம் மப்பும், மந்தாரமுமாக காட்சி அளித்தது. பிற்பகல் 2.30 மணியளவில் தேனியில் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. தேனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை கொட்டித் தீர்த்தது.

1 மணி நேரத்துக்கும் மேல் நீடித்த கனமழையால் நகரில் உள்ள சாலைகளில் மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. நேரு சிலை சிக்னல், பழைய பஸ் நிலையம், கம்பம் சாலை, மதுரை சாலையில் பங்களாமேடு திட்டச்சாலை ஆகிய இடங்களில் குளம்போல் தண்ணீர் தேங்கியது.

சாலைகளில் வெள்ளம்

தேனி ராஜவாய்க்காலில் தண்ணீர் செல்ல வழியின்றி சுப்பன்தெரு திட்டச்சாலை நோக்கி பாய்ந்தது. இதனால், அந்த சாலையே தெரியாத அளவுக்கு தண்ணீர் ஓடியது. பல நாட்கள் தேங்கி நின்ற சாக்கடை கழிவுநீரும் மழைநீருடன் கலந்து ஓடியது. இது மக்களுக்கு மிகுந்த பாதிப்பை கொடுத்தது.

தேனி சிவாஜி நகரில் மழைநீர் ஓடை அருகில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால், அங்கு வசித்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.

பொதுமக்கள் மறியல்

தேனி அருகே குன்னூரில் கழிவுநீர் வெளியேற முறையான வடிகால் வசதி இல்லாததால் மழை பெய்யும் போது வீடுகளின் முன்பு குளம்போல் தண்ணீர் தேங்கும். நேற்று பெய்த கனமழையால் தெருக்களில் தேங்கிய தண்ணீர் வீடுகளுக்குள்ளும் புகுந்தது. 30-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் விரக்தி அடைந்த பொதுமக்கள் குன்னூரில் உள்ள மதுரை சாலைக்கு திரண்டு வந்தனர். கையில் குடைகளை பிடித்தபடி கொட்டும் மழையில் அந்த மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது சிலர் சாலைகளின் குறுக்காக மரக்கட்டைகளை போட்டு வாகனங்களை செல்ல விடாமல் தடுத்தனர்.

இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியல் செய்த மக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. இதன் காரணமாக அந்த சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

ஆற்றில் வெள்ளப்பெருக்கு

போடி மற்றும் அதனை சுற்றியுள்ள மலைப்பகுதியில் விடிய, விடிய கன மழை பெய்தது. இரவு 10 மணிக்கு தொடங்கிய மழை காலை 6 மணி வரை பெய்தது. இதில் போடி பகுதியில் மட்டும் 38.6 மி.மீட்டர் மழை பதிவானது. இதனால் சாலைகளில் மழைநீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியது. இதன்காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

குரங்கணி மலைப்பகுதியில் பெய்த கன மழையால் கொட்டக்குடி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து பிள்ளையார் தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மழை நீர் அருவி போல் கொட்டுகிறது. மேலும் மலைப்பகுதியில் உள்ள பிச்சாங்கரை ஆறு, கூலாங்காறு ஆகியவற்றிலும் நீர் வரத்து அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக பிள்ளையார் தடுப்பணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் போடி அரசு மருத்துவமனையை மழை நீர் சூழ்ந்ததால் நோயாளிகள் சிரமம் அடைந்தனர்.

சாலையில் விழுந்த மரங்கள்

இதேபோல் கம்பம்மெட்டு மலைப்பாதையில் கனமழை பெய்தது. இதனால் மலைப்பாதையில் உள்ள 16-வது கொண்டை ஊசி வளைவில் நேற்று மாலை 3 மரங்கள் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தன.

இதன் காரணமாக மலைப்பாதை வழியாக எந்த வாகனமும் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்ததும் உத்தமபாளையம் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் குமணன், கம்பம் வடக்கு சப்-இன்ஸ்பெக்டர் விஜய் ஆனந்த் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர் பொதுமக்கள் உதவியுடன் மரங்களை வெட்டி அகற்றினர். சாலையின் குறுக்கே மரங்கள் விழுந்ததால் சுமார் 2 மணி நேரம் போக்குவத்து பாதிக்கப்பட்டது. இதனால் தோட்டத் தொழிலாளர்களின் ஜீப்புகள் மற்றும் கனரக வாகனங்கள் உட்பட ஏராளமான வாகனங்கள் மலைப்பாதையில் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.


Next Story