கிராமத்திற்குள் புகுந்த மழைநீர்


கிராமத்திற்குள் புகுந்த மழைநீர்
x

தொடர் மழை காரணமாக இளையான்குடி அருகே கிராமத்திற்குள் மழைநீர் புகுந்ததால் கிராம மக்கள் மற்றும் மாணவர்கள் கடும் அவதி அடைந்தனர்.

சிவகங்கை

இளையான்குடி,

தொடர் மழை காரணமாக இளையான்குடி அருகே கிராமத்திற்குள் மழைநீர் புகுந்ததால் கிராம மக்கள் மற்றும் மாணவர்கள் கடும் அவதி அடைந்தனர்.

மழைநீர்

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி வருகிறது. இளையான்குடி அருகே தாயமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட சாத்தமங்கலம் கிராமத்தில் 100 வீடுகள் உள்ளன. கிராமத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக கிராமத்திற்குள் மழைநீர் புகுந்ததால் கிராம மக்கள் வீடுகளில் இருந்து வெளியே செல்ல முடியாமல் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

மேலும் தேங்கி நிற்கும் மழைநீர் காரணமாக இரவு நேரத்தில் பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் வீட்டிற்குள் புகுந்து விடும் நிலை உள்ளது.

இதுதவிர தாயமங்கலம் அரசு பள்ளிக்கு இங்கிருந்து செல்லும் மாணவ-மாணவிகளும் கடும் அவதி அடைந்து உள்ளனர். இதுகுறித்து இக்கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் கூறியதாவது:- ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் எங்களது கிராமத்திற்குள் மழைநீர் புகுந்து விடும். அதேபோல் இந்த ஆண்டும் நேற்று பெய்த பலத்த மழைக்கு கிராமத்திற்குள் மழைநீர் புகுந்து தேங்கி உள்ளது.

நடவடிக்கை

இதுகுறித்து பல்வேறு அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எவ்வித பயனும் இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக கிராமத்திற்குள் தேங்கிய மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சி தலைவர் மலைராஜ்: கடந்த ஆண்டு பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஒத்துழைப்புடன் இக்கிராமத்தில் உள்ள பள்ளங்களில் மண்ணை கொட்டி மழை நீர் தேங்காத வண்ணம் முன்னேற்பாடுகள் செய்தோம்.

இந்த ஆண்டு வருவாய்த்துறை அதிகாரிகளின் போதிய ஒத்துழைப்பு இல்லாததால் மண்ணை எடுத்து பள்ளங்களில் கொட்ட வாய்ப்பு ஏற்படவில்லை. மேலும் நெடுஞ்சாலை துறை அனுமதி கிடைத்தால் வடிகால் அமைத்து தேங்கிய மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இனிவரும் காலங்களில் இக்கிராமத்தில் மழைநீர் தேங்காமல் இருக்கும் வகையில் போதிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தொற்றுநோய்

ஜான்சிராணி:- தொடர்ந்து மழைக்காலங்களில் எங்கள் கிராமத்தில் இதே பிரச்சினை இருந்து வருகிறது. கடந்த ஆண்டு இங்கு தேங்கிய மழைநீரை தற்காலிகமாக மின் மோட்டார் வைத்து வெளியேற்றினர். ஆனால் நிரந்தர தீர்வு காணவில்லை. தொடர்ந்து மழைநீர் தேங்குவதால் காய்ச்சல் உள்ளிட்ட தொற்றுநோய் பரவும் நிலை உள்ளது. பல்வேறு அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.

ஆண்டுதோறும் இந்த பிரச்சினை இருப்பதால் இங்கு குடியிருந்தவர்கள் பெரும்பாலும் அருகில் உள்ள கிராமத்திற்கு வாடகை வீட்டிற்கு சென்று விட்டனர். தொடர்ந்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் கிராம மக்கள் அனைவரும் கிராமத்தை காலி செய்து விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்.


Related Tags :
Next Story