சென்னையில் மழைநீர் பெரிய அளவில் தேங்கவில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னையில் மழைநீர் பெரிய அளவில் தேங்கவில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
சென்னை,
வடகிழக்கு பருவமழைத் தொடங்கியது முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் இரு தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது.
கனமழையால் புளியந்தோப்பு கே.பி.பூங்கா சந்திப்பு, பட்டாளம், வியாசர்பாடி பக்தவத்சலம் காலனி, மண்ணடி, பட்டாளம், பிராட்வே சாலை, தண்டையார்பேட்டை நேதாஜி நகர், ஜிபி சாலை, எழும்பூர் தமிழ்ச் சாலை, கிண்டி கத்திபாரா, ஈக்காட்டுத்தாங்கல் போன்ற இடங்களில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இப்பகுதிகளில் நேற்று முன்தினம் இரவே மாநகரின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்து கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த நிலையில், சென்னை: விருகம்பாக்கம் டபுள் டேங்க் சாலையில் நடைபெறும் மழை நீர் வடிகால் பணிகள் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி நேரில் ஆய்வு செய்தனர். அதனை தொடர்ந்து கே.கே.நகர் பகுதியில் உள்ள ராஜ மன்னார் சாலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.
அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
2 வருடம் நடைபெற்றிருக்க வேண்டிய மழைநீர் வடிகால் பணிகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொடர் முயற்சியால் 6 மாதங்களில் முடிந்துள்ளது. 400மோட்டார் மட்டுமே பயன்படுத்தும் அளவுக்கு நிலை மாறியுள்ளது.
குடிசை பகுதிகளில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடத்த உத்தவிட்டிருக்கிறோம். சென்னையில் மழை நின்ற பின் 200 மருத்துவ முகாம்களை கொண்டு வட்டத்திற்கு ஒன்று என நடத்த முடிவு செய்துள்ளோம்.
சென்னையில் கடந்த ஆண்டை போல் இந்தாண்டு மழைநீர் பெரிய அளவில் தேங்கவில்லை. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு பெரிய அளவில் வடிகால் அமைக்கப்பட்டதால் தான் மழைநீர் தேங்கவில்லை. வடகிழக்கு பருவமழை பாதிப்பு இல்லாத சென்னை என்கிற வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.